கள் இறக்க அனுமதி தராவிட்டால் ஜனவரி 21-ல் போராட்டம்; தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

காவிரியில் மாதாந்திரப் பங்கீட்டுக்கு பதிலாக தினசரி நீர்ப்பங்கீட்டு முறையை அமல்படுத்தக் கோரியும், நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கள் இறக்குவதற்கான தடையை நீக்காவிட்டால் ஜனவரி 21-ஆம் தேதி பெரிய அளவிலான கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் திருச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருச்சியில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு  ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டமைப்பின் செயலர் செ.நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரியில் நீர்ப் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு நடத்தி வரும் சட்டப் போராட்டத்துக்கு முடிவே இல்லாமல் 28 ஆண்டுகளுக்கு மேலாக நீண்டு கொண்டே வருகிறது. உச்சநீதிமன்றம், காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடக அரசு மதிப்பதில்லை. கர்நாடக அணைகள் நிரம்பியும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கவில்லை. தினந்தோறும் நீர்ப்பங்கீடு என்ற அடிப்டையில் சட்டப்போராட்டம் நடத்தி தீர்ப்பு பெற்றிருந்தால் தீர்வு எளிதாக இருக்கும். இரு மாநில உறவுகளும் மேம்பட்டிருக்கும். 2017இல் பெற்ற காவிரி இறுதித் தீர்ப்பில் மாதாந்திர நீர்ப்பங்கீடு என்ற முடிவுதான் இன்று வரை தமிழகத்துக்கு இடையூறாக உள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் கர்நாடக அணைகளின் பாதுகாப்புக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைகள் நிரம்பி, அணைக்கு சேதம் ஏற்படும் நிலை வந்தால் வெள்ள நீரை வடிக்கும் வடிகாலாகவே தமிழகத்தை கருதுகின்றனர். நடப்பாண்டும் இதே நிலைதான் உள்ளது. குறுவைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. 

மேட்டூர் அணை நிரம்பவில்லை. குறைந்த நாள்களே திறக்கும் தண்ணீரால் சம்பாவும் சாத்தியமில்லை. ஏற்கெனவே உள்ள தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு பெற வேண்டிய தண்ணீரை கூட பெற முடியவில்லை. எனவே, தினந்தோறம் நீர்ப் பங்கீடு ஒன்று மட்டுமே சரியான தீர்வாக அமையும். 

கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமையே. பனை மரங்களில் இருந்து பதநீராகவோ, நீராபானமாகவோ, கள்ளாகவே இறக்கியும், குடித்தும், விற்பனை செய்யலாம். மதிப்புக்கூடிய பொருள்களை தயாரித்து உலகளவில் சந்தைப்படுத்தலாம். கலப்படம் இருந்தால் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கலாம். எனவே, நடப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே கள் தடையை நீக்கி, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜன.21-ம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும். 

Trichy toddy

தமிழகத்தில் குறுவை சாகுபடி சோபிக்கவில்லை. ஆனால், கர்நாடகம் மட்டும் குறுவையை முழுமையாக அறுவடை செய்து கொண்டது. எனவே, காவிரி உரிமையை மீட்கவும், கள் இறக்கும் அனுமதியை பெறவும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு நடைபெறும் சட்டப் பேரவை இடைத்தேர்தலில் கொள்கை வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம். விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து அந்த வேட்பாளரை தேர்வு செய்யவுள்ளோம் என்றார்.

இக்கூட்டத்தில், காவிரிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலர் மகாதானபுரம் ராஜாராம், தமாகா விவசாய அணி மாநில நிர்வாகி ராஜேந்திரன், கள் இயக்க அமைப்பாளர் அருளானந்தம் மற்றும் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருச்சி சோமரசம் பேட்டை அருகே அதவத்தூர் கிராமத்திற்கு உட்பட்ட மேலப்பேட்டையில் உள்ள தமிழக விவசாயிகள் சங்கம் தலைவர் மா.ப சின்னத்துரைக்கு சொந்தமான தென்னந்தோப்பில்  கள் இறக்கி தமிழக விவசாய சங்கம் (கட்சி சார்பற்றது) மா. ப சின்னத்துரை தலைமையில் விவசாயிகள் கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பனை தென்னை மர கள்ளுக்கு தடையை நீக்கீடு, போதைப் பொருளை ஒழித்திடு, கள் தடையை நீக்கி தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கு உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழக விவசாய சங்கம் மற்றும் தமிழ்நாடு பனையேறும் பாதுகாப்பு இயக்கம்  உள்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

Source link