“100% மீண்டும் வெற்றி பெறுவோம்”: திருச்சி தி.மு.க செயற்குழுவில் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் சூளுரை

தி.மு.க தலைமைக்கழக வழிகாட்டுதலின்படி உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகளை விரைந்து முடிப்பது மற்றும் இழந்த தொகுதிகளை மீண்டும் கைப்பற்றி வரவிருக்கும் தேர்தல்களில் 100 சதவீத வெற்றியைப் பெறுவது குறித்து, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் தி.மு.க. முதன்மை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே.என்.நேரு தலைமையில் நடந்தது, இந்தக் கூட்டத்தில் கே.என்.நேரு பேசியதாவது: 

தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் திருச்சி தி.மு.க நூறு சதவீதம் வெற்றியை பெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் தான் நாம் ஏழு தொகுதிகளை இழந்துள்ளோம். மீண்டும் அந்த தொகுதிகளை நாம் வெற்றி பெற வேண்டும் அதற்காகத்தான் இந்த கூட்டம்.

இனி வரும் காலங்களில் நாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். மாநகரத்திற்கு இனி செயலாளர் கிடையாது. பகுதி செயலாளர்கள் மட்டுமே. பல மறுசீரமைப்பை தலைமை அறிவித்துள்ளது. அதன்படி செயல்பட வேண்டும், வயது மூத்தவர்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம். அனைவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படும் என தலைவர் தெரிவித்துள்ளார். நீங்கள் இருந்தால்தான் தி.மு.க வெற்றி பெற முடியும். நீங்கள் தான் தி.மு.க. அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம், உங்களுக்காக நான் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவேன் என தெரிவித்தார்.

Trichy DMK

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு வழக்கறிஞர் க.வைரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம்,  எஸ்.ஏ.அம்பிகாபதி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   இக்கூட்டத்தில் தலைமைக் கழகத்தின் சார்பாக வேலுசாமி, வேடசந்தூர் சாமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

திருச்சி மத்திய, கிழக்கு, வடக்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பிரதிநிதிகள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி திருச்சி மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்டங்களிலுள்ள அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மாநகர வட்ட கழகங்களில் மறுசீரமைப்பு பணிகளை தலைமை கழகத்தின் வழிகாட்டுதலின்படி விரைவாகவும் சிறப்பாகவும் செய்து சீரமைப்பு செய்யப்பட்ட பட்டியல்களை தலைமை கழகத்தில் விரைவில் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

நேருவின் தளபதியாக செயல்படுவோம் : தி.மு.க என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்துப்பார்க்க முடியாது- அன்பில் மகேஷ் பொய்யாமொழி 

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :

எனக்கு ஒன்று என்றால் நேருவும், அவருக்கு ஒன்று என்றால் நானும், கழகத்திற்கு ஒன்று என்றால் நாங்கள் இருவரும் சேர்ந்து நிற்போம்.

தி.மு.க என்கிற ஆலமரத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. நேருவின் தளபதியாக செயல்பட்டு இனி எந்த தேர்தல்கள் வந்தாலும் 100 சதவீதம் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்தக் கூட்டம்.

Trichy DMK

என்னையும் நேருவையும் பொன்னர் சங்கர் என ஸ்டாலின் கூறுவார். ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களுக்கு தி.மு.க பாதுகாப்பு வளையமாக இருக்கும்.

நேற்று நேரு வீட்டில் நடந்த சோதனையின்போது நான் அங்கு இருந்தேன். அந்த ஏழு மணி நேரத்தில் நிறைய பாடத்தை கற்று கொண்டேன். இனி யார் நிர்வாகிகளாக வந்தாலும் வரும் நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

Trichy DMK

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் வரும்போது தேர்தலில் வெற்றி பெற முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். டார்வின் கோட்பாட்டின்படி ஒரு உயிரினம்  வலிமையாக இருப்பதால் மட்டுமே நீண்ட நாள் வாழ்வதில்லை, சூழலுக்கு தகுந்தாற்போல் தன்னை தக்க வைத்து கொண்டால் தான் நீண்ட நாள் வாழ முடியும். தி.மு.க காலத்துக்கு ஏற்றவாறு தன்னை தக்க வைத்து கொண்டதால் தான் இன்னும் இயக்கம் நிலைத்து நிற்கிறது. கட்சியில் ஒருவருக்கொருவர் எந்தவித சங்கடங்களும் வரக்கூடாது.

நமக்கு எதிராக இருப்பவர்கள் பொய்யர்களாகவே இருக்கிறார்கள், அவர்களை நாம் எதிர்கொள்ள வேண்டும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

Source link