ஷென்சென்: சீன மாஸ்டர்ஸ் பாட்மின்டன் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் ஆனது.
சீனாவில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ஜியாங் யு ரென், ஜி டிங் ஹி ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 11-21 என இழந்த இந்திய ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 21-13 எனக் கைப்பற்றியது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இந்திய ஜோடி 21-17 என வென்றது.
ஒரு மணி நேரம், 10 நிமிடம் நீடித்த போட்டியில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 11-21, 21-13, 21-17 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு சீசனில் 2வது பட்டத்தை தட்டிச் சென்றது. சமீபத்தில் சிங்கப்பூர் ஓபனில் கோப்பை வென்றிருந்தது.
