காவல் துறையுடன் கரம் கோர்க்க மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

சென்னை: ‘மக்கள், காவல் துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடன், நல்லிணக்கத்துடன் பயணித்து, அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த, உன்னத தமிழகத்தை உருவாக்க உறுதி யேற்போம்’ என, முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

காவலர் நாளையொட்டி, அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த 1859ம் ஆண்டு, மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை, நினைவுகூரும் வகையில், காவலர் நாள் கொண்டாடப் படுகிறது.

இதையொட்டி, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும், தன்னலமின்றி பணியாற்றி வரும், காவல் துறையினர் அனைவருக்கும், என் நெஞ்சம் நிறைந்த காவலர் நாள் வாழ்த்துகள்.

நம் மாநிலத்தில் குற்றங்களை தடுத்து, சட்டம் – ஒழுங்கை பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும், மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளை பாதுகாப்பதிலும், துணிவுடன் நின்று களப்பணியாற்றி வரும் காவல் துறையினரின் வீரமும், தியாகமும் என்றும் போற்றத்தக்கவை.

காவல் துறையினரின் பணிச்சுமையை குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதி செய்வதற்கும், நம் அரசு முன்னுரிமை அளிக்கும்.

மக்களும் காவல்துறையுடன் கரம் கோர்த்து, நம்பிக்கையுடனும், நல்லிணக்கத்துடனும் பயணித்து, அமைதியும், பாதுகாப்பும் நிறைந்த, உன்னத தமிழகத்தை உருவாக்க, இந்நாளில் உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link