சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன்னையும் ஐ.யூ.எம்.எல்-ன் மற்றொரு எம்.எல்.ஏ-வைத் தேடி வந்த சிலர், பெட்டி பெட்டியாகப் பணத்தை நீட்டி விரும்பிய அமைச்சர் பதவியைத் தருவதாகக் கூறி குதிரைப் பேரத்தில் ஈடுபட முயன்றதாகவும், கொள்கைக்காக அந்த ஆசையை நிராகரித்து அவர்களை விரட்டியடித்ததாகவும் ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா திருவண்ணாமலையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
“சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாக பணத்தை பெட்டிகளில் கொண்டு வந்து கொடுத்து, உங்களுக்கு எந்த அமைச்சர் பதவி வேண்டும், கையெழுத்து போடுங்கள் என்று கேட்டனர்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா கட்சி கூட்டத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தாங்கள் பணத்திற்கு விலைபோகவில்லை என்றும், கொள்கைக்காக இருப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், குதிரைப் பேரம் குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியது.
ஐ.யூ.எம்.எல். கட்சி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ சையது ஃபாருக் பாஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இங்கு சோபா பற்றி விமர்சித்தனர். ஆனால், என்னையும் ஷாஜகானையும் தேடி வந்து கோடி கோடியாகப் பணம் கொண்டு வந்து அமைச்சர் பதவி தருகிறோம், கையெழுத்து போடுங்கள் என்றார்கள். நாங்கள் கோடிக்குச் சாய்ந்தவர்கள் அல்ல; கொள்கைக்குச் சார்ந்தவர்கள். எங்களுடைய இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொள்கையோடுதான் இருப்போம் என்று சொல்லி அவர்களை விரட்டி விட்டோம்.” என்று ஃபாருக் பாஷா பேசியிருப்பது தமிழ்நாட்டில் குதிரை பேரம் குறித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், “இரண்டு முப்திகள் பணத்தோடு வந்தார்கள். லெட்டர் பேட் தயாரித்து வந்து, ‘எந்த அமைச்சர் பதவி வேண்டும்? உள்ளாட்சி வேண்டுமா? போக்குவரத்துத்துறை வேண்டுமா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ் எங்களுக்குப் பதவி கொடுக்கக் கூடியவன்; உங்கள் பதவிக்கு எங்களது கொள்கையை விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை’ என்று சொன்னோம். அதன் காரணமாக ஷாஜகானை அழைத்து அமைச்சர் பதவி கொடுத்தார்கள். தலைவர், ‘எனக்கும் அமைச்சரவைப் பதவி வேண்டும்’ என்று கேட்டிருந்தார்” என்று ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ சையது ஃபாருக் பாஷா பேசியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அமைச்சர் பதவிகளையும், கோடிக்கணக்கான பணத்தையும் சலுகைகளாக நீட்டி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த குதிரைப் பேர குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
