ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறைகள் ஆபத்தானவை: தமிழக பா.ஜ., எச்சரிக்கை

சென்னை: ‘சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், ஹிந்துக்களின் பாதுகாப்பையும், முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்’ என, பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.


அவரது அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத முருகர் சிலை காணாமல் போனது. அந்த பதற்றம் தணிவதற்குள், சென்னையை அடுத்த சிறுவாபுரியில் இருந்து, முருகனின் அறுபடை வீடுகளுக்கும் கொண்டு செல்லப்பட இருந்த, 108 வெற்றி வேல்கள் அடங்கிய வாகனம் எரிக்கப்பட்டுள்ளது.

ஆன்மிக அரசியல் கட்சி சார்பாக, எடுத்துச் செல்லப்பட்ட வேல்களை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே, சமூக விரோதிகள் எரித்துள்ளனர். வெற்றி வேல்கள், தீயில் கருகுவதை பார்க்கையில், நெஞ்சம் கனத்துப் போகிறது.

சட்டசபையை, ‘சர்ச்’ ஆக மாற்றிய விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலுவாக தடை போட்டால், மத நல்லிணக்கம் எப்படி மலரும்; ஹிந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கும் சமத்துவ உணர்வு, அரசுக்கே இல்லாதபோது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயமிருக்கும்?

ஹிந்துக்கள் மீது தொடரும், இத்தகைய அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை. வெற்றி வேல்களை எரித்தவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதச்சார்பின்மை என்ற போர்வையில், சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், ஹிந்துக்களின் மத அடையாளங்கள் பாதுகாக்கப்படுவதையும், முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link