விவசாயிகள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் வரை அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுவதாக முதலமைச்சர் 110 விதியின் கீழ் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்க தகுந்த ஒன்று. இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் சமூக நீதித்துறையின் சார்பில் எமது கட்சியின் துணை பொதுச் செயலாளர் அமைச்சர் வன்னியரசு ஆணவப்படுகொலை தடுப்புச் சட்டம் கொண்டு வருவதற்கான சூழல் கணிந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். திமுக ஆட்சி காலத்தில் நியமனம் செய்யப்பட்ட நீதியரசர் கே.என்.பாஷா தலைமையிலான ஆணையம் 9 மாத காலத்திற்கு நீட்டிப்பு கோரியிருக்கிறது. அந்த காலநீட்டிப்பு அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த ஆணையத்தின் அறிக்கையை பெற்று அதன் அடிப்படையில் ஆணவக்கொலை தடுப்புச் சட்ட மசோதா வரையறை செய்யப்படும் என்பதை உறுதி செய்திருக்கிறார். இந்த கூட்டத்தொடரில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகளில் இதுவும் ஒன்று என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று கூறினார்.
இதையடுத்து 2029இல் பிரதமர் வேட்பாளர் விஜய்யா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பிரதமர் வேட்பாளரை பற்றி பேசுவதற்கான காலமே இப்போது இல்லை. இது தேவையில்லாத கேள்வி. 2029இல் தான் நாடாளுமன்றத் தேர்தல், இப்போது ஏன் அதைப் பற்றி பேச வேண்டும்?. என்னையும் தான் வருங்கால முதல்வர் என்று என் கட்சி தொண்டர்கள் சொல்வார்கள். இதெல்லாம் தலைவர்கள் மீது இருக்கிற பற்றின் அடிப்படையில் சொல்கிற கருத்து. தவெகவில் இருக்கும் முன்னணி தலைவர்கள் யாரும் விஜய் தான் அடுத்த பிரதமர் என்று சொல்லவில்லை.
அமைச்சர்கள் எல்லாம் இன்னும் தொண்டர் மனநிலையில் தான் இருக்கிறார்கள். அமைச்சர்களாக இருந்தாலும் இன்னும் அவர்கள் தொண்டர்களாக தான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்கள், இது அந்த கட்சியின் நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.
