இடிக்கப்பட்ட மசூதியின் தரைப் பகுதிக்கு அடியில் கண்டறியப்பட்ட கிணறு: சஹாரன்பூரில் பரபரப்பு

Written by: Manish Sahu

உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இருந்த மசூதி ஒன்று, மாவட்ட நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இடிக்கப்பட்டது. மசூதி இடிக்கப்பட்டதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை, அதன் இடிபாடுகளுக்கு அடியில் ஆழமான கிணறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கற்பலகையால் மூடப்பட்டிருந்த அந்தக் கிணறு, சுமார் 20 அடி ஆழமும், 1.5 மீட்டர் அகலமும் கொண்டதாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சஹாரன்பூர் கூடுதல் மாவட்ட ஆட்சியர் (ADM) சந்தோஷ் பகதூர் சிங் கூறுகையில், மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வந்தது. அப்போது அந்த இயந்திரம் திடீரென ஒரு கற்பலகை மீது மோதி நின்றது. உடனடியாக பணியாளர்கள் கட்டர் மூலம் அந்த கற்பலகையை உடைத்துத் திறந்தபோது, அதற்குக் கீழே ஒரு கிணறு இருப்பது வெளிப்பட்டது என்று தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்ல என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், கண்டறியப்பட்டுள்ள கிணற்றின் காலம் மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் தொல்லியல் துறை நிபுணர்களை அழைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தற்போதைக்கு இடிபாடுகள் கிணற்றுக்குள் விழுந்துவிடாமல் தடுக்கும் வகையில் அதன் மீது மூடப்பட்டுள்ளது. மேலும், வெளிநபர்கள் அப்பகுதிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காகத் தடுப்புகள் (பேரிகார்டுகள்) அமைக்கப்பட்டு, தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக, அந்த மசூதி அரசு நிலத்தில் அமைந்திருக்கும் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பு கட்டடம் என்று பிறப்பிக்கப்பட்ட முந்தைய உத்தரவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்பு வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு மசூதி இடித்துத் தள்ளப்பட்டது.

மசூதி தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து, நகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரக் காரணமான விகாஸ் தியாகி என்பவர், தற்போது கண்டறியப்பட்டுள்ள கிணறு குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மசூதிக்கு அடியில் வேறு ஏதேனும் புதைந்து கிடக்கிறதா என்பதைக் கண்டறிய இந்தியத் தொல்லியல் துறை குழுவை வரவழைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக ஜூலை மாதத்தில், இந்த மசூதியை அங்கீகரிக்கப்படாத கட்டடம் என அறிவித்த நகர மாஜிஸ்திரேட், 30 நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய உத்தரவிட்டார். மேலும், 315 சதுர மீ. அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக ‘உத்தர பிரதேச பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1972’-இன் கீழ், சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு ரூ. 6.41 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதனிடையே, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இந்த இடிப்பு நடவடிக்கை அவசரகதியில் மேற்கொள்ளப்பட்டதாக மசூதியின் முத்தவல்லி தன்வீர் அகமது குற்றம் சாட்டியுள்ளார்.

சஹாரன்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் இந்த இடிப்பு நடவடிக்கையைச் சாடியுள்ளார். அப்பகுதி மக்களைச் சுற்றிலும் சுற்றிவளைத்து, வீடுகளுக்குள்ளேயே அடைத்து வைத்துவிட்டு மசூதியை அதிகாரிகள் தரைமட்டமாக்கியுள்ளனர். இது சஹாரன்பூர் மக்களுக்கு ஒரு கறுப்பு நாள் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Source link