தனியார்மயம் சர்ச்சைக்குப் பதில்: சூழல் விரிவடைகிறது; தலைமைப் பங்கு எப்போதும் மாறாது என்று இஸ்ரோ விளக்கம்

Written by: Anonna Dutt

மேம்பட்ட விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான இந்தியாவின் முதன்மையான முதன்மை நிறுவனமாக இஸ்ரோ தொடர்ந்து நீடிக்கும் என்றும், இத்துறையில் தனியார் துறையின் பங்களிப்பு என்பது இஸ்ரோவின் பங்கைக் குறைப்பதற்காக அல்ல என்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

விண்வெளித் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளின் போக்கு, தற்போதைய பணியாளர்கள் மீதான அதன் தாக்கம் மற்றும் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு குறித்து கேள்வி எழுப்பி, இஸ்ரோவின் தலைவர் வி.நாராயணனுக்கு முக்கியப் பணியாளர் சங்கங்கள் கடிதம் எழுதியதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இஸ்ரோ இந்த விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

அதில், விண்வெளித் துறையைத் திறந்துவிடுவது, ‘இந்திய விண்வெளி கொள்கை 2023’ மற்றும் முற்போக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் (FDI) கொள்கை ஆகியவை இணைந்து, உலகளவில் போட்டியிடக்கூடிய பெரிய, வலுவான இந்திய விண்வெளிச் சூழலை உருவாக்குவதையே நோக்கமாக கொண்டுள்ளன. விண்வெளி சார்ந்த அனைத்து நிலைகளிலும் தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. இது இஸ்ரோவின் திறன்களை நிறைவு செய்வதாகவும், மேலும் பன்மடங்கு பெருக்குவதாகவும் அமையும். எனவே, இந்தச் சீர்திருத்தங்களைச் சூழலின் விரிவாக்கமாகவும், திறன்களின் பெருக்கமாகவும் மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, தனியார்மயமாக்கலாகக் கருதக் கூடாது என்று இஸ்ரோ கூறியுள்ளது.

இஸ்ரோ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், இஸ்ரோவின் அறிவியல் நிபுணத்துவம் மிக அவசியமாகத் தேவைப்படும் துறைகளில் அதன் பங்கு படிப்படியாக வலுப்படுத்தப்படும். குறிப்பாக, எல்லைகளைத் தாண்டிய அதிநவீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), புதிய தலைமுறை ஏவுதள அமைப்புகள், மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்கள் (Human Spaceflight), ஆழ்துளை விண்வெளி மற்றும் கோள்களை நோக்கிய ஆய்வுகள் மற்றும் நாட்டின் பாதுகாப்பு உத்திகளுக்கான விண்வெளித் திறன்கள் ஆகியவற்றிலேயே இஸ்ரோ முழு கவனம் செலுத்தும்.

அதே வேளையில், ஏற்கனவே முழுமை பெற்று வழக்கமாகத் தயாரிக்கப்படும் ராக்கெட்டுகள், வழக்கமான செயற்கைக்கோள்கள் மற்றும் பிற நிரூபிக்கப்பட்ட அமைப்புகளைத் தயாரிக்கும் பணிகள், உரிய போட்டி நடைமுறைகள் மூலம் தொழில் நிறுவனங்கள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களால் (PSU) விரிவுபடுத்தப்படும். இதன் மூலம், இஸ்ரோ தனது வளங்களையும் விஞ்ஞானிகளின் மனிதவளத்தையும் அடுத்த தலைமுறைக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சவாலான திட்டங்களுக்கு முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

2035-க்குள் ‘பாரதிய அந்தரிக்ஷ் மையம்’ (இந்திய விண்வெளி மையம்) அமைப்பது, 2040-க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தைச் செயல்படுத்துவது, மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை உருவாக்குவது, தொடர்ச்சியான நிலவு மற்றும் கோள் ஆய்வுகளை மேற்கொள்வது மற்றும் உலகளாவிய விண்வெளி வல்லரசாக இந்தியாவை நிலைநிறுத்துவது போன்ற தொலைநோக்கு இலக்குகளை இந்தியா கொண்டுள்ளது. இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத் திறன் தேவைப்படும் மாபெரும் திட்டங்கள். இவற்றை வெறும் வர்த்தக ரீதியான நடவடிக்கைகளால் ஈடுசெய்துவிட முடியாது. இதனால், இஸ்ரோ அதிநவீன ஆராய்ச்சி மற்றும் திறன்களை வளர்ப்பதில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட வேண்டியது இன்றியமையாதது.

தற்போது இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் சுமார் 8.4 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வேகமாக விரிவடைந்து வரும் உலக விண்வெளி சந்தையில் மிகக் குறைந்த அளவே ஆகும். உலக விண்வெளிச் சந்தையில் இந்தியாவின் பங்கை 2033-க்குள் 44 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அரசு நிதி மற்றும் இஸ்ரோவின் மனிதவளத்தை மட்டுமே கொண்டு இந்த பிரம்மாண்ட இலக்கை எட்டிவிட முடியாது. இதற்குத் தனியார் மூலதனம், தொழில்துறை உற்பத்தித் திறன், தொழில் முனைவோர் ஆற்றல் மற்றும் உலகளாவிய சந்தைக்கான அணுகல் ஆகியவை மிக மிக அவசியமாகும் என்று இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Source link