தமிழக சட்டசபை 3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. இன்று தமிழக முதல்வர் விஜய் காவல் துறை மானிய கோரிக்கை மீது பதிலுரை அளித்தார். தமிழகத்தில் குற்றம் நடந்த பிறகு தண்டனை கொடுப்பது மட்டும் அரசின் வேலை அல்ல. குற்றம் நடந்ததற்கான சூழலைக் கண்டறிந்து, அதனை முன்கூட்டியே தடுக்கவும் அரசு விழிப்புணர்வுடன் செயல்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும். காவல்துறை மரணங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சுதந்திரமான, நவீனமான காவல் துறையை உருவாக்குவதே அரசின் இலக்கு. உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் காவல் துறையினர் நலனையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்படுவது உறுதி செய்யப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பதிவாகும் ஒவ்வொரு வழக்கையும் விரைந்து விசாரிக்கப்படும். காவல் துறையின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு நிர்வாகம் ஊழலற்றதாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
