திமுக உறுப்பினர்கள் அவையில் தர்ணா: எழுந்த முதல்வர் விஜய்- கறார் காட்டிய பேரவைத் தலைவர் – dmk mlas dharna protest in tamil nadu assembly after cm vijay speech

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சியான திமுக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர். முழு உரையையும் வாசித்து முடித்த பின்னர், தாங்கள் பதிலளிக்க அனுமதிக்குமாறு கோஷங்கள் எழுப்பினர். ஆனால் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் இருக்கைக்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய பேரவைத் தலைவர், முதலமைச்சர் எப்போது பேசுவார் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தீர்கள். நாடே எதிர்பார்த்து கொண்டிருந்த அவரது உரை நிகழும் போது, அது முழுமையாக மக்களுக்கு போய் சேராத வகையில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டதை ஏற்க முடியாது. நீங்கள் அமைதி காத்திருந்தால் நிச்சயம் பேச அனுமதித்திருப்பேன் என்றார்.

ஆனால் திமுக உறுப்பினர்கள் ஏற்கவில்லை. முதலமைச்சர் விஜய்யை பார்த்து உறுப்பினர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்த படியே இருந்தனர். அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவை முன்னவர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். பின்னர் எழுந்த முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று திமுக உறுப்பினர்களை அவரவர் இருக்கையில் அமருமாறு பேரவைத் தலைவர் வலியுறுத்தினார்.

அதற்குள் பேரவைத் தலைவரை நிர்பந்திக்கும் வகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிக் கொண்டே இருந்ததால், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதிக்க முடியாது. நீங்கள் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கறாராக பேரவைத் தலைவர் பதிலளித்தார். இதனால் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பிய படியே இருந்த திமுக உறுப்பினர்கள் ஒருகட்டத்தில் வெளிநடப்பு செய்தனர். இதைப் பார்த்த தவெக உறுப்பினர்கள் மேஜையில் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

Source link