ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாயல் தேவி (21). இவர் செனாப் நதியின் மீதுள்ள பாலத்தின் மீது இருந்து குதித்து உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் உள்ளூர் திருவிழா ஒன்றில் கலந்துகொண்ட தேவி, திடீரென தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர் இல்லாததால், அவர் மீண்டும் தனது உறவினருடன் வீட்டிற்குப் புறப்பட்டார். அப்போது, வரும் வழியில் மோட்டார் சைக்கிளில் அவரது துப்பட்டா சிக்கிக்கொண்டது. இதனால், வாகனத்தை நிறுத்திய உறவினர், அந்த துப்பட்டாவை எடுக்க முயன்றார். இந்த இடைவெளியில் தேவி, வேகமாக ஓடிச்சென்று அங்கிருந்த பாலத்தின் மேல் நின்றுகொண்டு ”நான் தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன்” என்று சத்தமிட்டுக் கத்தியுள்ளார், இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இருப்பினும், அது முடியாமல் போன நிலையில், தேவி ஆற்றில் குதித்து உயிர் இழந்தார்.
இதனிடையே, உறவினர் தேவியின் தந்தைக்கு போன் செய்து, சம்பவம் குறித்து விளக்கினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, தேவிக்கு போன் செய்தார். அப்போது, தந்தையிடம் போனில் பேசிய தேவி ”அப்பா, டாட்டா… பை… பை…” என்று சிரித்தபடியே கூறிவிட்டு ஆற்றில் குதித்து உயிர் இழந்தார். இது சம்பந்தாமன வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குடும்பத்தாரை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் கண்கலங்க வைத்துள்ளது.
இதனிடையே, ஆற்றில் குதித்த தேவியின் உடலை காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து ஆற்றில் தேடும் பணியைத் தொடங்கியுள்ளனர். ஆற்றின் கரையோரம் மற்றும் தொடர்ந்து செல்லும் பகுதிகளிலும் தேடுதல் நடைபெற்று வருகிறது. ஆனால், இதுவரை தேவியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்பதற்கான தெளிவான காரணமும் இதுவரை தெரியவில்லை. இதனிடையே, இளம்பெண் ஒருவர் சிரித்தபடியே தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பொதுவெளியில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
