aja Ekadashi 2026 இன்று அஜா ஏகாதசி 2026 : இழந்த செல்வத்தை மீண்டும் பெற பெருமாளை இப்படி வழிபடுங்க

ஏகாதசி விரதம் என்பது பெருமாளின் அருளை பெறுவதற்காகவும், பாவங்களில் இருந்து விடுபடுவதற்காகவும் கடைபிடிக்கப்படும் மிகவும் புண்ணியமான விரதமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி விரதங்கள் வந்தாலும் சில குறிப்பிட்ட மாதங்களில் வரும் ஏகாதசி விரதம் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. அப்படி ஆவணி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசியை அஜா ஏகாதசி என்கிறோம். இது மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதசிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, மகாபாரதத்தில் தர்மருக்கு இந்த விரதத்தின் மகிமையையும், இதன் பின்னணியில் உள்ள அரிச்சந்திர மகாராஜாவின் நெஞ்சை உருக்கும் கதையையும் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இழந்த செல்வம், குடும்பம், நிம்மதி ஆகியவற்றை மீண்டும் மீட்டுத்தரும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

அஜா ஏகாதசி விரதக் கதை (சத்தியவான் அரிச்சந்திரன் கதை) :

முன்னொரு காலத்தில், அயோத்தியை ஆண்ட ரகு வம்சத்து மன்னனான அரிச்சந்திரன், “எந்தச் சூழ்நிலையிலும் பொய் பேச மாட்டேன்” என்ற சத்தியத்தைக் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்து வந்தான். அவனது சோதனைக் காலத்தில், விஸ்வாமித்திர முனிவருக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பதற்காகத் தனது ஒட்டுமொத்த அரசாட்சியையும், சொத்துக்களையும் துறந்தான். வறுமையின் பிடியில் சிக்கிய மன்னன், முனிவருக்கான தட்சிணையை அடைக்க வேறு வழியின்றித் தனது மனைவி சந்திரமதியையும், மகன் லோகிதாசனையும் ஒரு அந்தணருக்கு அடிமையாக விற்றான். தன்னைத் தானே ஒரு மயானக் காவலனுக்கு (புலையனுக்கு) அடிமையாக விற்றுக் கொண்டான். அரசனாக வாழ்ந்த அரிச்சந்திரன் பிணங்களை எரிக்கும் சுடுகாட்டைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.

கௌதம முனிவரின் அறிவுரை:

ஒருநாள், அவனது மகன் லோகிதாசன் பாம்பு கடித்து இறந்து போனான். மகனின் உடலைத் தகனம் செய்யப் பணமில்லாமல் அழுது கொண்டே மயானத்திற்கு வந்தாள் சந்திரமதி. காவல்காரனாக நின்ற அரிச்சந்திரன், தன் மனைவி என்றும் பாராமல் சுடுகாட்டு வரியைக் கேட்டான். கடமைக்காகவும் சத்தியத்திற்காகவும் அவன் பட்ட துயரைக் கண்டு இரங்கிய கௌதம முனிவர் அங்கு தோன்றினார். அரிச்சந்திரனின் கஷ்டங்களைக் கேட்ட முனிவர், “அரிச்சந்திரா! உன்னுடைய முற்பிறவி வினைகளின் பயனால் தான் நீ இவ்வளவு துன்பப்படுகிறாய். இன்னும் சில நாட்களில் பாத்ரபத தேய்பிறையில் அஜா ஏகாதசி வரவிருக்கிறது. நீ அன்று பகவான் விஷ்ணுவை நினைத்து முழு உபவாசத்துடன் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து வழிபடு. உன்னுடைய பாவங்கள் நீங்கி, விடிவு காலம் பிறக்கும்” என்று வழிகாட்டினார்.

அஜா ஏகாதசி விரதத்தின் பலன்:

முனிவர் கூறிய படியே அரிச்சந்திரன் அஜா ஏகாதசி விரதத்தை மிகத் தீவிரமான பக்தியுடன் கடைப்பிடித்தான். விரதத்தின் முடிவில், தேவர்கள் பூ மழை பொழிந்தனர். அவனது மகன் லோகிதாசன் உயிர்த்தெழுந்தான்; மனைவி சந்திரமதி பழையபடி அரசியானாள். அரிச்சந்திரனுக்கு அவனது இழந்த நாடும், அந்தஸ்தும், பெருமையும் மீண்டும் கிடைத்தன. இறுதியில் அவன் வைகுண்டப் பதவியையும் அடைந்தான்.

விரத வழிபாட்டு முறைகள்:

– ஏகாதசிக்கு முந்தைய நாள் (தசமி) இரவிலிருந்தே வெங்காயம், பூண்டு இல்லாத சாத்விக உணவை உண்ண வேண்டும்.

– ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடி, தூய ஆடைகளை அணிய வேண்டும்.

– பூஜை அறையில் பகவான் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் சிலையோ அல்லது படமோ வைத்து, மஞ்சள் நிற மலர்கள், சந்தனம், குங்குமம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

– விஷ்ணுவுக்கு உகந்த துளசி இலைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஏகாதசி அன்று துளசி பறிக்கக் கூடாது, முந்தைய நாளே பறித்து வைக்க வேண்டும்.

– நாள் முழுவதும் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தை அல்லது விஷ்ணு சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

– தண்ணீர் கூட குடிக்காமல் (நிர்ஜலா) அல்லது பழங்கள் மற்றும் பால் மட்டும் சாப்பிட்டு (பலாஹார்) அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப விரதம் இருக்கலாம்.

அஜா ஏகாதசியின் முக்கியத்துவமும் பலன்களும்:

அஜா ஏகாதசி என்ற சொல்லுக்கு ‘வருத்தத்தை நீக்குவது’ என்று பொருள். இந்த விரதம் ஒருவரது தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை வேரோடு அழிக்கும். அரிச்சந்திரன் தன் இழந்த ராஜ்யத்தை மீட்டது போல், வாழ்வில் நியாயமான முறையில் நாம் இழந்த செல்வம், வேலைவாய்ப்பு, குடும்ப ஒற்றுமை, நிம்மதி போன்றவற்றை மீண்டும் பெற இந்த விரதம் உதவும். இந்த ஒரு ஏகாதசி விரதத்தை முழுமையாகக் கடைப்பிடிப்பது, ஆயிரம் அஸ்வமேத யாகங்களைச் செய்ததற்கு இணையான புண்ணியத்தைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.

Source link