“பேசச் சொல்லுங்கள்” உதயநிதிக்காக சபாநாயகரிடம் விஜய் வைத்த கோரிக்கை? இணையத்தில் வைரலாகும் காட்சி – let udhay speak vijay asks speaker during assembly ruckus

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இதற்கு இந்த வாரம் பதிலளிப்பதாக முதல்வர் விஜய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அதன்படி, இன்று சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும் முதல்வர் விஜய் தனது பதிலுரையை வழங்கினார். இதில் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, மாணவர்கள் மத்தியில் வன்முறை மற்றும் திமுக ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார்.

“குற்றங்கள் கடந்த 100 நாட்களில் மட்டும் நடந்தவை அல்ல”

தமிழகத்தில் தற்போது நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் கடந்த 100 நாட்களில் மட்டும் உருவானவை அல்ல என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

குடும்பப் பிரச்சினைகள், தனிப்பட்ட குணாதிசயங்கள், போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குற்றச் செயல்கள் ஏற்படலாம் என்றும், அவற்றை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“65 போதை தடுப்பு அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளன”

மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக கல்லூரிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாக முதல்வர் விஜய் தெரிவித்தார்.

போதைப்பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் 65 போதை தடுப்பு அலகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்கவும், அவர்களை உளவியல் ரீதியாக பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

திமுக ஆட்சிக்கால ஊழல் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய விஜய்

தொடர்ந்து திமுகவின் செயல்பாடுகளை விமர்சித்த முதல்வர் விஜய், கடந்த கால திமுக ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், 1970களில் இருந்து திமுக ஆட்சிக்காலத்தில் எழுந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் பட்டியலிட்டார். குறிப்பாக, சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், வீராணம் திட்டத்துக்கான நீர் குழாய்கள் கொள்முதல் தொடர்பான டெண்டரில் 2.5 சதவீத கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

முதல்வர் பேச்சால் திமுக உறுப்பினர்கள் அமளி

முதல்வர் விஜய் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசிய நிலையில், திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

“மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” – சபாநாயகர்

திமுக உறுப்பினர்களின் அமளியால் அதிருப்தி அடைந்த சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதற்கு அனுமதி மறுத்தார்.

அப்போது, “முதல்வர் பேசும்போது நீங்கள் அமைதியாக இருந்திருந்தால், உங்களுக்கு பேச அனுமதி கொடுத்திருப்பேன். இப்போது நீங்கள் செய்யும் செயல்களை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என சபாநாயகர் தெரிவித்தார்.

“பேசச் சொல்லுங்கள்” – முதல்வர் விஜய்

இதற்கிடையே, திமுக எம்எல்ஏ ஒருவர் முதல்வர் விஜயை நோக்கி, “பேச வாய்ப்பு கொடுங்கள்” எனக் கோரிக்கை விடுத்தார். உடனே எழுந்த முதல்வர் விஜய், “பேசச் சொல்லுங்கள்” என தெரிவித்தார். இதனால் அவையில் மீண்டும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

இருப்பினும், சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டே உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படும் என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். இதனால், முதல்வர் விஜயின் பதிலுரையைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் அமளி நிலவியது.

தர்ணாவில் எம்எல்ஏவுக்கு கை கொடுத்த விஜய்

அது மட்டும் இன்றி, தர்ணாவில் ஈடுபடும்போது ஒரு திமுக எம்எல்ஏ கீழே அமர்ந்து எழுந்திருக்க முடியாமல் தவித்தார். அப்போது முதல்வர் விஜய் அவருக்கு கை கொடுத்து தூக்கினார். தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜயின் செயல்பாடுகள், எதிர்க்கட்சி எம்எல்ஏக்களிடம் அவர் நடந்து கொண்ட விதம் என அனைத்தும் இணையம் முழுக்க அவருக்கு பாசிட்டிவான ரெஸ்பான்ஸை பெற்றுத் தந்திருக்கிறது.

Source link