புற்றுநோய் என்றதுமே நம் நினைவுக்கு வருவது புகைப்பிடித்தல், மது அருந்துதல், அதிகப்படியான சூரிய ஒளி தாக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவையே. ஆனால், இவற்றையெல்லாம் தாண்டி அனைவராலும் எதிர்கொள்ளப்படும், எவராலும் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய ஆபத்து காரணி உள்ளது. அதுதான் வயது முதிர்வு.
புற்றுநோய் எந்த வயதினரையும் தாக்கலாம் என்றாலும், வயதாக ஆக பெரும்பான்மையான புற்றுநோய்கள் வருவதற்கான ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. இதுவே புற்றுநோய்க்கான மிக முக்கியமான ஆபத்து காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வயதுக்கும் புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு?
செல்களில் ஏற்படும் மரபணு மாற்றங்களால் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்பட்டு புற்றுநோய் உருவாகிறது. பல ஆண்டுகளாக இயல்பான உடல் செயல்பாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் செல்களில் டிஎன்ஏ சேதம் ஏற்படுகிறது.
வயதாகும்போது, உடலில் உள்ள செல்கள் பழுதுபார்க்கும் திறனும், அசாதாரண செல்களை அழிக்கும் திறனும் குறைகிறது. அதேபோல, நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்திறனும் மாறுபடுகிறது. இதனால் முதியவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து இளையவர்களை விட அதிகமாகிறது. இருப்பினும், வயதாகிறது என்பதற்காக அனைவருக்குமே புற்றுநோய் வரும் என்று அர்த்தமல்ல; மாறாக, காலம் செல்லச் செல்ல புற்றுநோயை உருவாக்கும் மாற்றங்கள் உடலில் சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
வாழ்க்கை முறையும் முக்கியம்!
அதிக உடல் எடை, உடற்பயச்சியின்மை, சில தொற்றுகள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு போன்றவையும் புற்றுநோய் அபாயத்தை உயர்த்துகின்றன. எனவே, வயதாகிவிட்டது என்பதற்காகத் தடுப்பு நடவடிக்கைகளைத் கைவிட வேண்டிய அவசியமில்லை. எந்த வயதிலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் அவசியமானது.
முதியவர்களுக்கான புற்றுநோய் பராமரிப்பு மற்றும் தடுப்பு முறைகள்:
உலகளவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறைகளுக்கு ஒரு சவாலாக உள்ளது. முதியவர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படும்போது, அவர்களுக்கு ஏற்கனவே உள்ள பிற உடல்நலப் பிரச்சினைகள், உடல் இயக்கம் மற்றும் மருந்துகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தனிப்பட்ட உடல்நிலை மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் வழங்கப்படும் விரிவான சிகிச்சைகள் அவர்களுக்குப் பெரிதும் உதவும்.
வயது முதிர்வு தவிர்க்க முடியாதது என்றாலும், புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது, மதுவைக் கட்டுப்படுத்துவது, உடல் எடையைப் பராமரிப்பது, உடற்பயிற்சி செய்வது மற்றும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும். வயது எந்த நிலையிலும் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் முறையான சிகிச்சைகள் எப்போதும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
