திங்கள் கிழமை (செப். 7) அன்று, சட்டமன்றத்தில் நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் விரிவான பதிலுரை வழங்கினார்.
அப்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற பார்ட்டி ஃபண்ட் ஊழல் தொடர்பான அமலாக்கத் துறை அறிக்கையை வாசித்து விஜய் சரமாரியாக குற்றம்சாட்டினார்.
சட்டமன்றத்தில் விஜய் பேசியதாவது
”எதிர்க்கட்சியினருக்குப் ‘பார்ட்டி ஃபண்ட்’ வசூலித்ததற்கான ஆதாரங்கள் தானே வேண்டும்? அதை இந்த விஜய் சொல்வதை விட, மத்திய அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் என்ன கூறியுள்ளது என்பதை இந்தப் பேரவையின் முன் வைக்க விரும்புகிறேன்.
ஒப்பந்தப் புள்ளிகளில் 7.5% முதல் 10% வரை கட்சி நிதியாகக் கட்டாயப்படுத்திப் பெறப்பட்டுள்ளதாக அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அரசு ஒப்பந்தங்களின் அடிப்படையில் ‘பார்ட்டி ஃபண்ட்’ என்ற பெயரில் பகிரங்கமாக லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
- “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட அரசுப் பணிகளில், கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியாகத் தமிழக அரசை நடத்தி வந்தவர்களின் சுய லாபத்திற்காகவே இந்த லஞ்சம் வசூலிக்கப்பட்டது” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, அப்போது எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தது? திமுக! இதோடு முடியவில்லை… இதன் அடுத்தகட்ட உச்சத்தை இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
- “இந்தக் கட்சி நிதியின் நேரடிப் பயனாளி அப்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் கவிபிரசாத், ரமேஷ் பிரபு மற்றும் அதிகாரிகளால் வசூலிக்கப்பட்ட பெயரறியப்படாத நபர்கள்…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் நடந்த முறைகேடு அல்ல. அடுத்தடுத்த துறைகளிலும் தொடர்ந்திருக்கிறது. எந்தெந்தக் காலகட்டத்தில் யார் அமைச்சராக இருந்தார்கள், பின்னர் யார் மாற்றப்பட்டார்கள் என்ற விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அது அவர்களின் உள்கட்சிப் பிரச்சினை.
ஆனால், மற்றொரு துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறை வழங்கிய தரவுகள் மிகத் தெளிவானவை. அந்தத் துறையின் அமைச்சராகப் பணியாற்றிய செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தையும், பதவியையும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்
இதுதான் திமுகவின் இயல்பு.
முந்தைய ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தைக் கவனித்து வந்த அமைச்சரோடு சேர்ந்து, சில ஐ.ஏ.எஸ் உட்பட உயர் அரசு அதிகாரிகளும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, ‘ரதீஷ்’ என்ற தனிநபர், மாவட்ட வருவாய் அலுவலர் நிலை அதிகாரிகள் (DRO) உட்படப் பல உயர் அதிகாரிகளின் பணிமாறுதல்களைத் (Transfers) தீர்மானிக்கும் சக்தியாகச் செயல்பட்டுள்ளார்.
இந்த ரதீஷ் என்பவரின் உத்தரவின் பேரில்தான் அன்றைய டாஸ்மாக் மேலாண் இயக்குநராக (MD) இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியே செயல்பட்டுள்ளார்!
யார் இந்த ரதீஷ்? இவர் யாருக்கு நெருக்கமானவர்? நமது அரசு அமைந்த பிறகு இவர் துபாய்க்குச் சென்று தலைமறைவாகிவிட்டார். இத்தனை ஆண்டுகளாக யாருடைய வழிகாட்டுதலின் பேரில் இவர் செயல்பட்டார் என்பதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?
அதேபோல, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தங்களில் (Transport Tenders) சட்டவிரோதமாகத் தலையிட்டதாகவும், நிதி முறைகேடுகளில் (Fraud, manipulation and illicit financial transactions) ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
2021 முதல் 2025 வரை நடைபெற்ற இந்த நிதி முறைகேடுகளை ஒருங்கிணைத்ததே இந்தச் சகோதரர்கள்தான் என்றும், கடந்த ஒரு சகாப்தத்திற்கும் மேலாக இது தொடர்வதாகவும் கூறப்பட்டுள்ளது. திமுக எதைச் செய்தாலும் குடும்பமாக இணைந்துதான் செய்வார்கள் என்பதற்கு இதுவே சான்று.
அடுத்ததாக, கோவை, கரூர் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மதுபானக் கூடங்களின் (Bars) உரிமையாளர்களிடம் கட்டாயப்படுத்திப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அந்தத் தரப்பினரை ‘கரூர் கேங்’ (Karur Gang) என்று அழைப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ‘கரூர் கேங்’ கூட்டத்தின் தலைவன் யார் என்பதில் மக்களுக்கும் பெரும் ஆவல் இருக்கிறது.
மதுபான நுகர்வோரிடம் வழக்கமான கட்டணத்தை விட ₹10 முதல் ₹100 வரை சட்டவிரோதமாகக் கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! தயவுசெய்து இதைக் கவனிக்க வேண்டும். “மிகத் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட முறையில்” இதனைச் செய்திருக்கிறார்கள். அதாவது செய்யக்கூடிய சட்டவிரோதச் செயலையும் மிக ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள். ‘விஞ்ஞான ஊழல்’ என்று சொல்வார்களே… அது இதுதான்!
திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை விவரிக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் இவைதான்: சீர்கேடு, மோசடி, கையாளல், துஷ்பிரயோகம், அதிகாரத் துஷ்பிரயோகம், கரூர் கும்பல், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றக் கும்பல், நேர்மையற்ற நோக்கம், ஊழல் மற்றும் சட்டவிரோத முறை!
(Malpractice, Fraud, Manipulation, Misuse, Abusing power, Karur Gang, Organized crime syndicate, Dishonest intention, Corrupt and illegal manner…)
இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டினால், “உச்சநீதிமன்றம் பிணை (Bail) வழங்கிவிட்டது” என்று ஒரே வரியில் தப்பிக்கப் பார்ப்பார்கள். பிணையை மறுத்த உயர்நீதிமன்றமும் சரி, பிணை வழங்கிய உச்சநீதிமன்றமும் சரி… “வழக்கை விசாரிக்கவே கூடாது” என்று கூறவில்லையே! கடவுச்சீட்டை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்கச் சொன்னதன் உள்நோக்கம் என்ன? தமிழக மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இரண்டு துறைகளின் ஆவணங்களைத் திறந்ததற்கே இவ்வளவு முறைகேடுகள் வெளிவருகின்றன என்றால், அனைத்துத் துறைகளின் கோப்புகளையும் திறந்தால் இன்னும் எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியவில்லை!
“ஆதாரம் எங்கே?” என்று கேட்டீர்களே… இந்த ஆதாரங்கள் போதுமா?
பொதுவாக உலகத்தில் இரண்டு வகை மனிதர்கள் உண்டு:
தவறு செய்துவிட்டுச் சிக்கிக் கொள்பவர்கள்.
தவறு செய்துவிட்டு அதில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு, சிக்காதது போல் தவறு செய்பவர்கள்.
திமுக மேடைகளில், “திமுக இருக்கும் இடத்தில் தவறு நடக்காது; தவறு நடக்கும் இடத்தில் திமுக இருக்காது” என்று பெருமையாகப் பேசுவார்கள்.
அதை நான் இந்த மன்றத்தில் சற்றே மாற்றிப் பதிகிறேன்:
“திமுக இருக்கும் இடத்தில்தான் தவறு நடக்கும்; தவறு நடக்கும் இடத்தில்தான் திமுகவே இருக்கும்!”
இவ்வாறு விஜய் சட்ட மன்றத்தில் சரமாரியாக பேசினார்.
