முத்து படத்தின் கம்போசிங்கிற்காக கேரளாவின் கொச்சிக்கு சென்றிருந்தபோது, வாழ்க்கையில் இல்லறம் என்பது என்ன என்று தான் ரஜினிகாந்துக்கு சொன்னதாகவும், அதை அவர் பாடலில் வைக்க முடியுமா என்று கேட்டதாகவும், அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அதை வைத்து ஒரு பாடலை எழுதியதாகவும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
இது குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து கூறுகையில், ஒரு முறை நாங்கள் பாட்டு எழுத கொச்சிக்குச் சென்றிருந்தோம். நான், தம்பி ரஹ்மான், ரஜினிகாந்த் ஆகிய மூவரும் சென்றோம். பகல் முழுவதும் ரஹ்மான் தூங்கி விடுவார். இரவெல்லாம் இசையமைப்பார். நாங்கள் இரவில் தூங்கிபவிடுவோம். இதனால் நாங்கள் சந்திப்பது என்பது முடியாத ஒன்றாக இருந்துது. ரஹ்மான் தூங்கும்போது நானும் ரஜினிகாந்தும் பல நிகழ்ச்சிகள் குறித்து பேசுவோம்.
அரசியல், சினிமா, சமூகம், வாழ்க்கை, மதம், அறிவு, பண்பாடு, வரலாறு, பொருளாதாரம், செக்ஸ், ஆண், பெண் எல்லாம் பேசுவோம். அப்படி பேசிக் கொண்டு இருந்தபோது, இந்த உலகத்தில் எல்லாம் பார்த்துவிட்டோம். கடைசில் எது நிக்கிறது எதுவுமே நிற்கவில்லை. எல்லாமே சொந்தமாக இருந்து தெரிகிறது. ஆனால் கடைசியில் எதுவுமே சொந்தம் இல்லை என்று சொன்னேன். அடடே ரொம்ப அழகான கருத்தை சொன்னீர்கள். இதைத்தானே ஞானிகளும், ரிஷிகளும் முனிவர்களும் சொல்லிக் கொண்டு போனார்கள்.
இதைப் பற்றி நான் ஒரு கதை சொல்லட்டுமா என்று கேட்டபோது சொல்லுங்க என்று சொன்னார். ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதே கடைசி காலத்தில் நம் பேச்சை கேட்பதற்கு ஒருவராவது இருக்க வேண்டுமே என்றுதான். முதலில் பாட்டி தாத்தா இறப்பார்கள். தாய் தந்தையர்கள் இறப்பார்கள். உறவுகள் குறைந்து போகும் நண்பர்கள் பிரிந்து போவார்கள். ஒரு வீட்டில் ஒரு கூட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மட்டும் உரையாடக்கூடிய காலம் வரும்.
அப்போது ஆண் பேசுவதை கேட்பதற்கு ஒரு பெண்ணும், பெண் பேசுவதை கேட்பதற்கு ஒரு ஆணும் மிச்சம் இருப்பதுதான் இல்லரத்தின் உச்சம். இதுதான் உண்மை அதனால் யார் சொன்னாலும் காது கொடுத்து கேளுங்கள். ஒருவருடைய பேச்சை முடிக்கிற வரைக்கும் குறுக்கீடு இருக்கக்கூடாது. ஒரு பேச்சு முடிஞ்சு பிறகுதான் உங்க வார்த்தையை நீங்க தொடங்க வேண்டும். இடையில் குறுக்கீடு செய்தால், அங்கதான் சண்டைக்கு வித்து விழும். அப்படி பண்ணக்கூடாது என்று சொன்னேன். அவருக்கு சொல்ல சொல்ல ஆசையாக இருந்தது.
அடுத்து அவருக்கு ஐயா அலக்ஸான்டர் பற்றி ஒரு கதை சொல்றேன் என்றேன். அலக்ஸான்டருக்கு மரணம் வந்து கொண்டு இருக்கிறது என்று தெரிந்து தனது தளபதியை அழைத்து, நாளை நான் இறந்து போவேன். என் உடலை மாசிதோனியாவுக்கு கொண்டு சென்றுதான் நீங்கள் அடக்கம் செய்ய வேண்டும். அப்படி கொண்டு செல்கிற போது ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து என்னை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் ஒரு என் கைகள் இரண்டும் சவப்பெட்டிக்கு வெளியே இருக்கட்டும் என்று சொன்னார். உடனே துடித்த தளபதி ஏன் மன்னா, ஏன் அப்படி? என்று கேட்டான்.
இந்த உலகம் முழுவதை வென்று முடித்து, இனிமேல் வெள்ளுவதற்கு நாடு இல்லையே என்று கவலைப்பட்ட அலக்ஸான்டருக்கு போகும்போது, வெறுங்கையோடு போனான் என்பதை இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும் என்று சொன்னான். அலேக்ஸாண்டரின் கல்லரை மீது எழுதப்பட்ட வரி இந்த உலகம் முழுவதும் போதாது என்றவனுக்கு இந்த கல்லரை குழி போதுமானதா இருக்கிறது இவ்வளவுதான் என்று சொன்னேன். இதை கேட்டன ரஜினி பிரமாதம். இந்த கருத்தை பாட்டில் வைக்க முடியுமா என்று கேட்டார்.
அதை வைத்து எழுதிய பாடல் தான் மனிதன் மீது மனிதனுக்கு ஆசை, மனிதன் மீது மண்ணுக்கு ஆசை, மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது. இதை மனம் தான் உணர மறுக்கிறது என்ற பாடல். இந்த பாடலை கேட்டு ரஜினிகாந்த் கைத்தட்டினார். அவர் கைதட்டிய இடங்களில் எல்லாம் சமூகம் கைத்தட்டியது என்று வைரமுத்து கூறியுள்ளார்.
