தமிழ்நாட்டில் நிலவும் கனிம வளத் தேவையைப் பூர்த்தி செய்யவும், சட்டவிரோதக் கடத்தலைத் தடுக்கும் நோக்கிலும் ஜல்லிக்கற்கள், எம்-சாண்ட் (M-Sand) மற்றும் கருங்கல் போன்ற கனிமங்களை அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை 27, 2026 அன்று 3 மாத கால இடைக்காலத் தடை விதித்தது.
அரசின் இந்தத் தடையால் தங்களது வாழ்வாதாரமும், தொழில் ஒப்பந்தங்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் கூறி, ஆறுக்கும் மேற்பட்ட கனிமவள வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நிலுவையில் இருந்த வழக்குகள் அனைத்தும், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருக்கும் முதன்மை வழக்குடன் சேர்த்து விசாரிக்க சென்னைக்கு மாற்றப்பட்டன.
முன்னதாக ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தடைக்கு எதிரான மனுக்கள் குறித்து விரிவான பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (07.09.2026) இந்த அனைத்து வழக்குகளும் பட்டியலில் 40-வது வழக்காக விசாரணைக்கு வருகின்றன. இன்றைய விசாரணையில் கனிம வளங்கள் கொண்டு செல்வது தொடர்பான முக்கியமான உத்தரவு அல்லது தீர்ப்பு வெளியாகலாம் என்பதால், வழக்கு தொடர்ந்தவர்கள் மற்றும் துறை சார்ந்த வணிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.
