ஈரோடு: தாயை பிரிந்து 10 நாட்களாக தனியாக தவித்த குட்டி யானை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தாயைப் பிரிந்து 10 நாட்களாக விவசாய நிலத்தை ஒட்டிய குட்டையில் தனியாகச் சுற்றித்திரிந்த குட்டி யானையை வனத்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.

அந்தியூர் அருகே வட்டக்காடு வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டைக்கு கடந்த 10 நாட்களாக ஒரு குட்டி யானை தனியாக வந்து செல்வதாக அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று காலை அந்தியூர் வனச்சரகர் நந்தினி தலைமையில் வனவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட வனத்துறையினர் அந்த இடத்திற்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வந்த குட்டி யானை, குட்டைக்கு வந்து நின்றது. பின்னர் அங்கிருந்த சீமைக்கருவேல மரத்தை உலுக்கி அதன் காய்களைத் தின்றது. தொடர்ந்து, வனத்துறையினர் ட்ரோன் மூலம் காற்றின் சத்தத்தை ஒலிக்கச் செய்து, குட்டி யானையை வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதி நோக்கி விரட்டினர்.

இதுகுறித்து வனச்சரகர் நந்தினி கூறுகையில், “கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெண் குட்டி யானை விவசாய நிலத்தை ஒட்டிய குட்டையில் தனியாகத் தங்கியிருந்தது. குட்டி யானை தாயைப் பிரிந்திருக்கலாம், தாய் யானை இறந்திருக்கலாம் அல்லது தாய் யானையால் விரட்டப்பட்டுத் தனியாக வந்திருக்கலாம். தற்போது வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில் குட்டி யானையை விட்டுள்ளோம். அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

Source link