மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. இந்நிலையில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அரசியல் சாசன உரிமையை கட்டுப்படுத்த முடியாது; தேவாலயத்தை புனரமைக்க ஐகோர்ட் அனுமதி
சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படவுள்ளதால், சார்பதிவாளர்களின் வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டுமே செயல்படும். சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வக்ஃபு வாரியம் தெரிவிக்கும் தடைசெய்யப்பட்ட நில விவரங்கள் ஸ்டாரில் பதிவேற்றம் செய்யப்படும். மோசடி பதிவுகளைத் தடுக்கவும், பதிவுகளைப் பாதுகாக்கவும் ஏ.பி.ஐ இணைப்பு வழங்கப்படும். மேலும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் ஸ்டார் இணையதளத்தில் நேரடியாக நிலப் பதிவுகளை உள்ளீடு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
ஆவணங்களை நேரில் தாக்கல் செய்ய தேவையில்லை. இணையவழியில் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று புகைப்படம் மற்றும் கைரேகை மட்டும் வழங்கினால் போதும். பதிவு முடிந்ததும் ஆவணம் இணையவழியில் அனுப்பப்படும். மேலும், குடும்ப ஏற்பாடு ஆவணங்கள் 15-10-2026 முதல் காகிதமில்லா முறையில் மட்டுமே பதிவு செய்யப்படும்.
போலி இறப்பு மற்றும் வாரிசுரிமைச் சான்றிதழ்கள் மூலம் நடைபெறும் மோசடி பதிவுகளை தடுக்க, சான்றிதழ் எண்கள் ஏ.பி.ஐ மூலம் நிகழ்நேரத்தில் சரிபார்க்கப்படும். இதனால் பதிவு சேவைகள் விரைவுப்படுத்தப்பட்டு, போலி ஆவணப் பதிவுகள் தடுக்கப்படும்.
மாநிலத்தில் முதலாம் விற்பனை நிலையில் மதிப்புக் கூட்டு வரி செலுத்திய பின்னர் பெட்ரோல் மற்றும் டீசல் மறுவிற்பனை செய்யும் சில்லறை விற்பனை நிலையங்கள் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெற்று இருப்பின், தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
வரிவிதிப்பு தணிக்கை மற்றும் திருப்புத்தொகை உள்ளடக்கிய வரி செலுத்துவோருக்கான சேவைகளின் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு வரி நிர்வாகத்தில் ‘முகம் அறியாத’ நடைமுறை விரிவுபடுத்தப்படும்.
