66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி; விநாயகருக்கு ரூ.700 கோடியில் காப்பீடு

மராட்டிய மாநிலம், மும்பை நகரின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் மிகவும் விலை உயர்ந்த விநாயகர் சிலை ஒவ்வொரு வருடமும் தயாரிக்கப்படுகிறது. அத்துடன், அதற்கான காப்பீடும் பல கோடிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.  

மும்பையில் உள்ள கிங்ஸ் சர்கிள் ஜிஎஸ்பி சேவா மண்டல், சார்பில் 72 வது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.  வழக்கத்தை விடவும் இந்த ஆண்டு வெகுவிமர்சியாக இந்த விழா கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்காக, பொதுமக்கள் காணிக்கையாக அளித்த 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும் விநாயகர் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையின் ஜிஎஸ்பி, விநாயகர் சிலை ரூபாய் 703 கோடிக்குக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த தங்கம், வெள்ளி நகைகளால் அலங்கரிக்கப்படும் இந்த பெரிய அளவிலான விநாயகர் சிலை, விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தயாராகி வருகிறது.  

இந்த விநாயகர் சிலையில், அதிக மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், விலைமதிப்புமிக்க நவரத்தின கற்கள் பயன்படுத்தப்படுவதால், அதற்கான பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விநாயகர் சிலை 703.27 கோடி ரூபாய்க்குக் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 474 கோடிக்குக் காப்பீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது கிட்டத்தட்ட அது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காப்பீட்டுத் தொகை ரூ.703 கோடியே 27 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல, இந்த விழாவில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் மற்றும் பக்தர்களுக்கும் சேர்த்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் ஒவ்வொரு பக்தரின் பாதுகாப்பிற்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது தங்களின் கடமை என்று நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. 5 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த விழாவில், தினமும் 40 ஆயிரம் பேர் வீதம், 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அன்னதானம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link