தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்துள்ள நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தான் இயக்கி நாயகனாக நடித்த சின்ன வீடு திரைப்படத்தை இப்போது ரீமேக் செய்தால் அந்த கதை யாருக்கு சரியாக இருக்கும் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
உதவி இயக்குனராக இருந்த பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குனராக அறிமுகமாகி ஒரு காட்சியில் நடித்திருந்தவர் பாக்யராஜ். அதனைத் தொடர்ந்து புதிய வார்ப்புகள் (1979) படத்தில் முதலில் நாயகனாக அறிமுகமான பாக்யராஜ் சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு கை ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூரல் நின்னு போச்சு, பொய் சாட்சி, டார்லிங், டார்லிங், டார்லிங், சொக்கத்தங்கம், என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
குறிப்பாக பெண் ரசிகைகளை கவரும் வகையில் இவரின் திரைக்கதை அமைந்திருக்கும். அதேபோல் ஒரு கை ஓசை திரைப்படத்தில் சாதிய பிரிவினைகள் குறித்து பேசியிருப்பார். இநத வரிசையில் வெளியான படம் தான் சின்ன வீடு. மனைவி குண்டாக இருப்பதால், அடுத்த பெண்னை தேடி போகும் கணவன் அனுவிக்கும் முக்கிய பிரச்னைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கபட்ட இந்த படத்தில், பாக்யாஜூவுடன், கல்பனா, கோவை சரளா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
1985-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றிபடமாக அமைந்த நிலையில், இந்த படத்தை இப்போது ரீமேக் செய்தால் யார் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்பது குறித்து பாக்யராஜ கூறியுள்ளார். இதில், பேசிய பாக்யராஜ், சின்ன வீடு படத்தை இப்போது இருக்கும் அஜித், விஜய் சூர்யா ஆகியோரை வைத்து எடுக்க முடியாது. கொஞ்சம் சபலம், மற்றும் விளையாட்டு புத்தியுடன் இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் சிம்புவுக்கு இந்த கதை சூட் ஆகும். நான் வேற மீனிங்கில் சொல்லவில்லை, எதார்த்தமாக சொல்கிறேன். அந்த கேரக்டர் நான் செய்தது போல் விளையர்டுத்தனமாக தப்பு தண்டா செய்ய வேண்டும்.
அப்படி பார்த்தோம் என்றால் அது சிம்புவுக்கு சரியாக இருக்கும். சின்னவீடு என்று சொன்னவுடன், நான் சிம்பு என்று சொன்னவுடன் வேறு எதையே நினைத்துவிடாதீர்கள். சிலருக்கு மட்டும் தான் இந்த கதை செட் ஆகும் என்று கூறியுள்ளார்.
