சட்டப்பேரவையில் இன்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை அளிக்கும் போது, வழக்கம் போல பிரதான எதிர்க்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதனிடை மிசா குறித்து பேசும்போது முதல்வர் விஜய் தனது கையை வைத்து சைகை ஒன்று காட்டினார். இது சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில், திமுகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்நிலையில் முதல்வரின் சைகை குறித்து திமுக முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பாக காட்டமான விமர்சனங்களை முன்வைத்து பேசினார் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் . முதல்வருக்கு மூன்று நாள் டைம் உள்ளது. அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து Prepare செய்து திங்கட்கிழமை அவர் பதிலளிக்கலாம் எனவும் அவர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
இப்படியான நிலையில் முதல்வர் விஜய் இன்றைய தினம் பதிலுரை அளிக்கும் போது சைகை காட்டியுள்ளது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை உருவகேலி செய்யும் விதமாக விஜய் சைகை காட்டியுள்ளதாக இணையத்தில் விவாதங்கள் கிளப்பியுள்ளன. இந்நிலையில் இவ்விவகாரத்தில் முதல்வர் விஜய்யை கடுமையாக தாக்கி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார் திமுக எம்.எம். அப்துல்லா .
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் திமுகவினர் மிசாவில் அடி வாங்கியதை கிண்டல் செய்யும் விதமாக மோசமான செய்கை ஒன்றை செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காப்பதற்காக சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பாக விடிய விடிய கை கட்டி நின்ற கோழைத்தனம் தான் தவறு. இவ்வாறு தன்னுடைய பதிவில் கடுமையான விமர்சனங்களை எம்.எம். அப்துல்லா முன்வைத்துள்ளார்.
