எழுதியவர்: அனிஷ் மண்டல்
நாகர்கோவில் ரயில் நிலைய மேம்பாடு
தமிழ்நாட்டின் நாகர்கோவில் ரயில் நிலையம் மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தயாராகி வருகிறது. ரயில்வேயின் இயக்கத் திறனை வலுப்படுத்த 9 புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திடம் கூறுகையில், “இந்த மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 9 புதிய ரயில் பாதைகளுடன் (Stabling lines) சேர்த்து, நடைமேடை எண் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு புதிய நடைமேடைகளும் கட்டப்படவுள்ளன. இந்த கூடுதல் உள்கட்டமைப்பு திட்டங்கள் நாகர்கோவிலில் அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்திற்குப் பெரிதும் துணையாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
பயணிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வசதிகள்
ரயில் நிலைய வளாகத்தை விரிவுபடுத்துவதுடன், அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் (ABSS) கீழ் பயணிகளுக்கான பல மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்திய ரயில்வே வலையமைப்பில் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக 2022-ம் ஆண்டு தொடக்கப்பட்ட இத்திட்டம், மாஸ்டர் பிளான் தயாரித்தல், பலமுறை போக்குவரத்து இணைப்பு, பயணிகளுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நீண்டகால தொலைநோக்கு பார்வைகளைக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி கூறுகையில், “ரயில் நிலைய முகப்பு மண்டபம், நுழைவுப் பகுதி, வாகன நிறுத்துமிடம், பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம் மற்றும் காத்திருப்போர் கூடம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காகக் கழிப்பறை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், நடைமேடை எண் 1 இன் தரைத்தளம் சீரமைக்கப்பட்டு, அதன் மேற்கூரை விரிவுபடுத்தப்படவுள்ளது. பயணிகள் ரயில் நிலையத்திற்குள் எளிதாக நடைமேடைகளைக் கடந்து செல்ல 6 மீட்டர் அகலமுள்ள புதிய நடைமேம்பாலம் (எஃப்.ஓ.பி) அமைக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், குடிநீர் விநியோக இயந்திரங்கள், சார்ஜிங் பாயிண்டுகள், டிஜிட்டல் பெட்டி காட்டும் பலகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி அறிவிப்பு அமைப்புகள் ஆகியவை அமைக்கப்படவுள்ளன.
ரயில் நிலைய அணுகுசாலை, வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் விளக்கு வசதிகள் மேம்படுத்தப்படும். பயணிகள் எளிதாக வழிகளைக் கண்டறிய அரை நீள்வட்ட வடிவிலான தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கூடுதலாக, இரண்டு நுழைவு வளைவுகள் கட்டப்பட்டு, ரயில் நிலையக் கட்டிடத்தின் வெளிப்புற முகப்பு அழகுபடுத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டு, திருவனந்தபுரம் – கன்னியாகுமரி இருப்புப் பாதை இரட்டிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் ஜங்ஷன் – கன்னியாகுமரி இடையேயான ரயில் பாதையை இரட்டிப்பாக்கும் பணியை இந்திய ரயில்வே நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.
