குடும்பங்கள் கொண்டாடும் காதல் படமா? – ‘ஹாய்’ விமர்சனம்

டாடா படத்தின் வெற்றிக்கு பிறகு அதே போன்ற ஒரு வெற்றியைப் பெற நடிகர் கவின் முயற்சி செய்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மாஸ்க், கிஸ் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெறாமல் போனது. அதை சரிக்கட்டும் விதத்தில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப ஹாய் படம் மூலம் கோதாவில் குதித்து இருக்கிறார். அவர் எதிர்பார்த்த வெற்றி ஹாய் மூலம் கிட்டியதா, இல்லையா?

திருமணம் செய்து கொண்டால் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் என அடம்பிடிக்கும் 90ஸ் கிட்டாக இருக்கிறார் கவின். மற்றொரு பக்கம் திருமணமே வேண்டாம் என விரக்தியில் இருக்கிறார் நயன்தாரா. இவர்கள் இருவரும் தன் சொந்த ஊரை விட்டு சென்னைக்கு ஓடி வருகின்றனர். வந்த இடத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இருவரும் சந்திக்க நேர்கிறது. அதில் கவின் நயன்தாரா மேல் ஒரு தலை காதல் கொள்கிறார். அந்த காதலை நயனிடம் சொல்ல வரும் நேரத்தில் இருவரது குடும்பத்தாரும் இவர்கள் இருவரையும் தேடி கண்டுபிடித்து சுற்றி வளைக்கின்றனர். அந்த நேரத்தில் தன்னால் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் என ஒரு குண்டை தூக்கி போடுகிறார் கவின். பிறகு என்ன இருவருக்கும் ஊரில் திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது. 

நயன்தாராவுக்கோ எப்படியாவது திருமணத்திலிருந்து தப்பித்து வெளிநாடு சென்று விட வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். கவின் தன் காதலை எப்படியாவது நயனிடம் தெரிய வைத்து அவரை கன்வின்ஸ் செய்து திருமணம் செய்ய வேண்டும் என எண்ணுகிறார். உறவினர்களோ இவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன் எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என முயல்கிறார்கள். இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி கவின் நயன்தாரா காதல் ஒன்றுகூடியதா, இல்லையா? கவினின் நாடகம் உறவினர்களுக்கு தெரிய வந்ததா, இல்லையா? நயன்தாராவின் கனவு என்ன ஆனது? என்பதே இப்படத்தின் மீதி கதை.

கவினுடன் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியான உடனேயே இத்திரைப்படத்தின் மீது ஆச்சரியமும் மிகுந்த எதிர்பார்ப்பும் நிலவியது. இது எந்த மாதிரியான காதல் திரைப்படமாக இருக்கும் என பல்வேறு யூகங்களும் உலா வந்தன. இந்த மாதிரியான விஷயங்களாலேயே இந்த  திரைப்படத்தை பார்க்கும் எண்ணம் பலருக்குள் ஊடுருவியதை பெரும்பாலும் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல குடும்பத்துடன் கொண்டாடும் காதல் காமெடி படமாக இத்திரைப்படத்தை உருவாக்கி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன். ஒரு இன்னசென்டான 90ஸ் கிட் இளைஞர் அவருடைய காதலை இதயம் முரளி பாணியில் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு தவிக்கும் கதாபாத்திரத்தை கிராமத்தில் இருந்து வந்த மார்டன் பெண் மீது காதல் கொள்ள வைத்து அதை நகைச்சுவை கலந்த காதல் படமாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

115

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் கலகலவென நகரம் திரைப்படம் அவ்வப்போது காதல் ரசம் சொட்ட சொட்ட பார்ப்பவர்களை காதலுக்குள்ளும் இழுத்து அதேசமயம் குடும்பங்களும் இணைந்து பார்க்கும் படியாக ஃபேமிலி சென்டிமென்ட் சரியான கலவையில் கலந்து ஒரு நல்ல ஃபீல் குட் திரைப்படம் பார்த்த உணர்வை இந்த ஹாய் திரைப்படம் கொடுத்திருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகள் சில இடங்களில் யூகிக்கும்படி இருந்தாலும் அவை போரடிக்காத படி இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ். 90ஸ் கிட்ஸும் 2கே கிட்ஸும் இணைந்து ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி இன்னும் வேகமாக இருப்பது இன்னும் சிறப்பு. 

கவின் 90ஸ் கிட்ஸ் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டு நடித்திருக்கிறார். இதுவரை பார்த்த கவின் இல்லாமல் இந்த திரைப்படத்தில் வேறு ஒரு கவின் தென்படுகிறார். அது அவரது கரியருக்கு நன்றாக உதவியும் இருக்கிறது. இவருக்கும் நயன்தாராவுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. நயன்தாராவும் வழக்கம் போல் நாயகி கதாபாத்திரத்தை தன்னுடைய பாணியில் சிறப்பாக செய்திருக்கிறார். பல இடங்களில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கின்றனர். இருந்தும் நாயகியின் வயது முதிர்ச்சி பல இடங்களில் எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை. நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மறைந்த பிரபலம் பாக்கியராஜ் சிறப்பான பங்களிப்பை கொடுத்து விட்டு சென்றிருக்கிறார். இது அவரது கடைசி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

113

அம்மாவாக வரும் ராதிகா வழக்கம் போல் சிறப்பாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். நாயகியின் அப்பாவாக வரும் பிரபு குடிகார கதாபாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். கவினின் நண்பராக வரும் ஆதித்யா டிவி கதிர் சிறப்பான பங்களிப்பு கொடுத்திருக்கிறார். தனக்கு கிடைத்த கேப்புகளில் சிறப்பான முறையில் ஸ்கோர் செய்கிறார். தமிழ் சினிமா இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தலாம். மற்றொரு காமெடியனாக வரும் குரேஷி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மாமாவாக வரும் சத்யன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் தலைகாட்டி தனது வேலையை நிறைவாக செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார் பெப்சி விஜயன், மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாகவும் அழகாகவும் இருக்கிறது. ஒரு காதல் திரைப்படத்திற்கு எந்த அளவு நேர்த்தியான ஏஸ்தட்டிக்கான ஒளிப்பதிவு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்திருக்கிறார். ஜென் மார்ட்டின் இசையில் ரசகுல்லா பாடல் சிறப்பு. பின்னணி இசையும் கதைக்கு என்ன தேவையோ அதற்கு சிறப்பான முறையில் பங்களிப்பு செய்திருக்கிறது. இந்த கால இளசுகளை கவர இன்னும் கூட ஜென் மார்டிடமிருந்து சரக்கு தேவைப்படுகிறது. 

வழக்கமான காதல் கதையை வைத்துக்கொண்டு அதை இந்த காலத்தில் இருக்கும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி விறுவிறுப்பாகவும் ட்ரெண்டிங் ஆகவும் அதே சமயம் கலகலப்பாகவும் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் கொடுத்திருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து அதுவே இந்த படத்தை காப்பாற்றி கரை சேர்த்திருக்கிறது.

ஹாய் – ப்ரீஸி!

Source link