நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக 14 மாநிலங்கள் உட்பட, சில யூனியன் பிரதேசங்களிலும் இப்பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 16 மாநிலங்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற உள்ளது.
இந்நிலையில், மொத்தமுள்ள வாக்காளர் பட்டியலில் கிட்டதட்ட 15 சதவீதத்தினரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் குற்றம் சாடியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ”நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 15 விழுக்காட்டினரை இந்தத் திருத்தப் பணியின்மூலம் தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. முன்பு, சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களைக் கண்டறிவதே இந்தச் செயலின் (எஸ்.ஐ.ஆர்) முதன்மை நோக்கம் எனக் கூறப்பட்டது. ஆனால், அதுபோன்று இதுவரை எத்தனை பேரைக் கண்டறிந்துள்ளனர் என்ற விவரத்தைத் தேர்தல் ஆணையம் ஏன் வெளியிடவில்லை?
குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை அரசியல் சாசனப் பிரிவு 326ன்படி அடிப்படை உரிமையாகும். நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி வாக்குரிமையைப் பறிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த செயல்களின் மூலமாக கிட்டதட்ட 15 கோடி வரையிலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தால்கூட செய்ய முடியாத சாதனையைத் தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
