முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறைபட்டு அடிபட்டதை கிண்டல் செய்யும் விதமாக முதல்வர் விஜய் இன்றைய தினம் சட்டமன்றத்தில் பேசியுள்ளதாக இணையத்தில் விவாதங்கள் வெடித்துள்ளன. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடர்பான பதிலுரையில் சர்ச்சைக்குரிய வகையில் விஜய் செய்கை காண்பித்துள்ளதாக திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா , முதல்வரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
மிசா பற்றிய பேச்சு
சட்டமன்ற கூட்டத்தொடர் மூன்று நாட்களுக்கு பின்பாக கூடிய நிலையில் முதல்வர் ஜோசப் விஜய்யின் பதிலுரையுடன் துவங்கியது. அவர் பேசுகையில் சர்க்காரிய கமிஷன் அறிக்கையை குறிப்பிட்டு திமுகவை விமர்சனம் செய்தார். அதோடு மிசாவை பார்த்தவர்கள். மிசாவை பார்த்தவர்கள் என்று சொல்கிறார்கள். மிசா பற்றிய வரலாறு எல்லாருக்கும் என தெரியும் சைகை ஒன்றை காட்டினார். இதனையடுத்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை உருவகேலி செய்யும் விதமாக விஜய் செய்கை காட்டியுள்ளதாக சர்ச்சைகளை கிளம்பியுள்ளன.
திமுகவினர் கண்டனம்
மிசாவில் கைதாகி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறைபட்டு அடிபட்டதை கிண்டலடிக்கும் வகையில் முதல்வர் சைகை காட்டியிருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக திமுகவின் முன்னாள் எம்பி எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை இணையத்தில் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர்.
டி.ஆர்.பி. ராஜா பதிவு
அந்த வகையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்வருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதில், தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுடைய முகத்தில் இருப்பது வெறும் தழும்பு அல்ல. அதிகார வெறியில் ஜனநாயகத்தில் குரல்வளையை நெரித்த அவசரநிலைக் காலத்தில், மிசா சிறையில் நெஞ்சுரத்துடன் அடக்குமுறையை எதிர்கொண்ட ஒரு போராளியின் வீரத்தழும்பு அது.
விபத்தில் முதல்வரான நடிகர்
சிறைவாசமும் அடக்குமுறையும் தந்த அந்த தழும்புக்கு பின்னால் இருப்பது, அவர் ஜனநாயகத்திற்காக ஏற்றுக்கொண்ட வலி. எதற்கும் அஞ்சாத ஒரு போராளியுடைய மகத்தான அரசியல் வரலாறு. ஒரு ஜனநாயக விபத்தில் முதலமைச்சரான நடிகர் ஜோசப் விஜய் போன்றவர்கள் என்றென்றும் எட்ட முடியாத அரசியல் வரலாற்று பெருஞ்சிகரத்தை எட்டியதற்கான அடையாளம்தான் நம் தலைவருடைய அந்த தழும்பு என தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார் டி.ஆர்.பி. ராஜா.
Coat Suit போடும் CM விஜய்! M.K .Stalin அடித்த நச் Comment
தலைவருக்கு அந்த தழும்பு அவமானமல்ல
மேலும் ஜனநாயகம் காக்கும் போராளியாக உறுதியுடன் நின்று, அடக்குமுறையில் பெற்ற காயத்தையே கேலி செய்வது அருவருப்பான அற்பத்தனம் என கடும் விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார். அந்த தழும்பு தலைவருக்கு அவமானம் அல்ல. பெருமிதம். தியாக வரலாற்றினை உணரத் தெரியாத அரசியல் அறிவற்றவர்களின் கேலிச் சிரிப்புதான் அழிக்க முடியாத அவமானத் தழும்பு. இவ்வாறு தனது பதிவில் காட்டமான விமர்சனங்களை டி.ஆர்.பி. ராஜா முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
