புதுடில்லி: தமிழகத்தில் இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி, அக்.6ம் தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது.
இந் நிலையில், அந்த 7 தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்.6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இரு தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.9ம் தேதி தொடங்கி, செப்.16ல் முடிகிறது. செப். 17ம் தேதி அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். செப். 19ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.
அக்.9ம் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக இருந்தாலும், இவ்விரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கு காரணமாக மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் முறையே எம்எல்ஏக்களாக வென்ற மரகதம் குமரவேல், சத்யபாமா இருவரும் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் ஐக்கியமாகினர்.
தமிழகம் தவிர, புதுச்சேரி தட்டாஞ்சாவடிக்கும் அக்.6ம் தேதி இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. மேற்கு வங்கம் ரெஜிநகர், நந்திகிராம், அசாமின் நாகான் ஆகிய தொகுதிகளுக்கும் அக்.6ம் தேதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
