2026 சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு எப்பொழுது இடைத்தேர்தல் ஏற்ற கேள்வி ஒருபுறம் மேலோங்கி வந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமரவேல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் தாராபுரம் (தனி) தொகுதியில் சத்யபாமா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருவரும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தற்பொழுது இந்த இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் அதாவது செப்.9 ஆம் தேதி முதல் இந்த இரண்டு தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. செப்.16 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்.17 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு அக்டோபர் ஆறாம் தேதி நடைபெற உள்ள நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவிப்பு வெளியான நிலையில் தற்போதே இந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் வெற்றிபெற்று தனது பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ சத்யபாமா தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு கொடுத்த தொலைபேசி பேட்டியில், ”போன முறை நாங்கள் முழுமையாக கடுமையாக உழைத்தோம். தமிழக வெற்றிக் கழகத்தின் பெரிய அலை இருந்தாலும் அதிமுக வெற்றி பெற்றது. அதற்கு எங்களுடைய கடுமையான உழைப்பு; கடுமையான முயற்சி காரணம். இந்த முறை அந்த அளவிற்கு சிரமப்பட வேண்டியது இருக்காது. தவெகவின் ஆட்சி நன்றாக இருக்கிறது. லஞ்சம் ஊழல் எல்லாமே குறைந்திருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது வெற்றிக்காக கடந்த முறை போல இந்த முறை நாங்கள் கஷ்டப்படத் தேவையில்லை. எனக்கு வாய்ப்பு வரும் என நம்புகிறேன். எங்கள் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அது எனக்கு சரிதான்” என்றார்.
