சென்னை: ‘இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதிமுக ஆட்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சராக வேலுமணி இருந்தபோது, சென்னை, கோவை மாநகராட்சிகளில், சாலை பணிகளை மேற்கொள்ள, தனது உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக, வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என, லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக, அறப்போர் இயக்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளான கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி வழங்க தாமதம் செய்வது ஏன்’ என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர அனுமதி வழங்கக் கோரி, தமிழக அரசு அனுப்பிய கடிதம், ஜூலை 28ம் தேதி கிடைத்தாகவும், அதன் மீது பரிசீலனை நடந்து வருவதாகவும் மத்திய அரசு தரப்பில், தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில், இது தொடர்பாக ஆக., 27ம் தேதி நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது:ஊழல் வழக்கில் அனுமதி வழங்க தாமதம் ஏற்படுத்துவது ஏன்; இந்தியர்கள் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை என, இதுபோன்ற வழக்கில் இருந்து தான் முடிவுக்கு வர வேண்டியுள்ளது. ஒரு ஊழல் வழக்கில் ஒப்புதல் பெற, நீதிமன்றம் எவ்வளவு வற்புறுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீதான ஊழல் வழக்கை விசாரிப்பது சிரமமாக உள்ளது. அனுமதி பெறவே, இவ்வளவு சிரமங்களை சந்தித்தால், இதற்கு பின் இந்த வழக்கில் என்ன நடக்கும் என, கடவுளுக்குத் தான் தெரியும்.இவ்வாறு நீதிபதி அதிருப்தியாக கூறினார்.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர, ஒப்புதல் அளிப்பதற்கு தாமதம் செய்தது ஏன் என்பது குறித்தும், ஒப்புதல் கோரிய கடிதத்தின் தற்போதைய நிலை குறித்தும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்க, மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறை சார்பு செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
