தமிழ், தெலுங்கில் வரிகள்; ஒரு பாட்டுக்காக 3 மாதங்கள் உட்கார வைத்த செல்வராகவன்: ஜி.வி.பிரகாஷ் ப்ளாஷ்பேக்

தனது இசையமைப்பில் இயக்குநர் செல்வராகவன் பாடல்களில் எவ்வாறு தலையிடுவார் என்பது குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தயாரிப்பாளராகவும் சில படங்களை தயாரித்துள்ளார். மேலும், சிறந்த இசையமைப்பிற்காக தேசிய விருது வென்றுள்ள அவர், தற்போது இசையமைப்பு, நடிப்பு மற்றும் தயாரிப்பு என பிஸியாக இருந்து வரும் நிலையில், இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் பாடல்களை எப்படி கேட்டு வாங்குவார் என்பது குறித்தும், அவருடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

இது குறித்து பேசிய ஜி.வி.பிரகாஷ், செல்வராகவன் திருத்தங்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டால், அந்தப் பாடலை முழுமையாக மாற்றிவிடுவார். ஒரு பாடலில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருப்பார். அவரிடம் இருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. ஒருமுறை தனுஷ் என்னை ஸ்டுடியோவில் சந்திக்க வந்திருந்தார். அப்போது செல்வராகவனும் நானும் அங்கு இருந்தோம். வாழ்க்கையைப் பற்றி மிகவும் கேஷுவலாகவும் ஜாலியாகவும் இருக்கும் ஒரு பாடல் வேண்டும் என்று தனுஷ் சாதாரணமாகக் கூறினார். 

அதன்பிறகு அந்தக் கருத்தை அடிப்படையாக வைத்து நான் ஒரு முயற்சி செய்து பாடலை உருவாக்கினேன். அதை பார்த்து தனுஷ், சும்மா ஓட ஓட தூரம் குறையல அந்த மாதிரி என்று சொன்னார். அதை கேட்ட நான் இது நல்லாருக்கே என்று சொல்லி அதையே பாடலாக மாற்றினோம். 10 நிமிடங்களில் அந்த பாடல் முடிந்துவிட்டது. ஆனால் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வரும் ‘தாய் தின்ற மானே என்ற பாடலை உருவாக்கும்போது, அவர் என்னை சுமார் மூன்று மாதங்கள் தொடர்ந்து வேலை செய்ய வைத்திருக்கிறார். 

அந்த ஒரே பாடலில் தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளுக்கான வரிகள் வர வேண்டும் என்று கேட்பார். குறிப்பிட்ட இடத்தில் ருத்ரவீணை போன்ற இசைக்கருவியின் பயன்பாடு இருக்க வேண்டும் என்றும், மற்றொரு பகுதியில் பாடகரின் சங்கதிகள் வர வேண்டும் என்றும் பல்வேறு விஷயங்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களையும் ஒரே பாடலுக்குள் கொண்டு வருவதற்காக நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அந்தப் பாடலின் தெலுங்கு வரிகளை ஒருவர் எழுதியிருந்தார்; தமிழில் வைரமுத்து வரிகளை எழுதியிருந்தார். 

இவ்வாறு பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து அந்தப் பாடலை உருவாக்கியது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. செல்வராகவனுடன் மீண்டும் ‘மென்டல் மனதில்’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறேன். அவருடைய பாடல்கள் எப்போதும் தனித்துவமானதாக இருக்கும். காதல், நகைச்சுவை, ஜாலி என எந்த வகையான பாடலாக இருந்தாலும், அதில் அவரது தனிப்பட்ட அணுகுமுறை தெளிவாகத் தெரியும். குறிப்பாக செல்வராகவன் எழுதும் வரிகளிலும் அவருக்கே உரிய தனித்துவம் இருக்கும். அவரது பாடல் வரிகளும், பாடல்களின் உருவாக்க முறையும் எப்போதும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகின்றன,” என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Source link