தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில் பேசினாலே பொதுமக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வரும் நிலையில், இன்று அவர் ஆற்றிய பதில் உரை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகனின் அரசியல் குறித்து பெருமைப்படுவதாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
இது குறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் அவர் விஜய்யுடன் இருக்கும் காட்சியும், மற்றொரு புகைப்படத்தில் விஜய் தனது பெற்றோர் இருவருடனும் இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர், முதல்வர் என்ற பொறுப்பில் தனது மகனை சந்தித்தது குறித்து தனது உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். மிகப்பெரிய பொறுப்புகளையும் அழுத்தங்களையும் எளிதாகக் கையாளும் விதத்தில் விஜய் செயல்படுவது ஒரு தந்தையாக தனக்கு பெருமை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள மிகப்பெரிய பொறுப்புகளையும் அழுத்தங்களையும் மிகவும் எளிதாகக் கையாளும் முதல்வரை சந்தித்தது, ஒரு தந்தையாக எனக்கு மிகுந்த பெருமையை அளித்த தருணமாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு விஜய்யின் ரசிகர்கள் மற்றும் த.வெ.க தொண்டர்கள் இடையே இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், விஜய்க்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் ரசிகர்கள் கருத்துப் பகுதியில் தெரிவித்தனர். ஒரு ரசிகர் விஜய்யையும் அவரது பெற்றோரையும் பாராட்டி, “எங்கள் முதல்வர் தனது தந்தையைப் போல துணிச்சலானவர்; தனது தாயைப் போல அன்பானவர்” என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே கடந்த மே மாதம், சந்திரசேகர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியபோது, தனது மகனைப் பற்றிய பெருமிதத்தை வெளிப்படுத்தினார். முதலில், ஒரு தந்தையாக நான் மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். நானும் எனது மனைவியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது மகனின் தன்னம்பிக்கை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதை நான் பார்த்து வருகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.
அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் தன்னிடம், “நான் தமிழகத்தின் முதல்வராக இருப்பேன் என்று சொன்னார். தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் தன்னம்பிக்கை குறைபாட்டின் சிறிதளவு அறிகுறியைக்கூட வெளிப்படுத்தவில்லை. நான் எனது சொந்தக் காலில் நிற்பேன்; எந்தக் கூட்டணியும் வேண்டாம். இது தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும், தமிழர்களுக்கும் நல்ல விஷயம். நிச்சயமாக, விஜய்க்கு இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
மேலும், கடந்த 30 ஆண்டுகளாகவே, சமூகத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அந்த எண்ணம் அவரது மனதில் இருந்தது. படிப்படியாக அவர் அந்த எண்ணங்களை வளர்த்துக்கொண்டார். இன்று அவர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிறார்” என்று சந்திரசேகர் தெரிவித்தார்.
