ஒரே ஆண்டில் 4 முறை இடமாற்றம்: தவறுகளை சுட்டிக்காட்டினால் இப்படித்தானா?- ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவேசம்

Summary

மத்திய பிரேதசத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அரசு அதிகாரி ஒருவர், கடந்த ஓராண்டில் தொடர்ந்து நான்காவது முறையாக இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தன்னுடைய உயர் அதிகாரிகள் தன்னை ஒரு கிள்ளுக்கு இரையாக பார்ப்பதாக ஐ.ஏ.எஸ் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

2011 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான நேஹா மார்வ்யா கடந்த 2017-இல் சிவ்புரி மாவட்ட பஞ்சாயத்து தலைமை அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டார்.

அப்போது இவருக்கு வாகன கட்டணங்கள் தொடர்பாக அப்போதைய ஆட்சியர் ஓ.பி. ஸ்ரீவஸ்தவா உடன் மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உயர் அதிகாரிகள் அந்த பணியில் இருந்து வேறு இடத்திற்கு மாறுதல் செய்தனர்.

இதையடுத்து 2022-ல் வருவாய் துறையில் பணியாற்றிய அவர், தனது பதவியை பொறுப்பேற்க முதன்மை செயலாளர் மனிஷ் ரஸ்தோகி தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக குற்றம்சாட்டினார்.

இதைத்தொடர்ந்து நேஹா கடந்த ஜனவரி 2025-ல் திண்டோரி பகுதியில் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற எட்டு மாதங்களுக்கு பிறகு உயர் அதிகாரிகள் அவரை ஆட்சியர் பதவியில் இருந்து நீக்கினர்.

நேஹா மத்தியப் பிரதேச பட்டியல் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேஹா, பழங்குடியினர் பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநராக பொறுப்பேற்று இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால் அவர் வெளியிட்ட அரசு அறிவிப்புகளை தொடர்ந்து, ஊழியர்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன் காரணமாக தொடர்ந்து ஓராண்டில் நான்காவது முறையாக அதிகாரிகள் அவரை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

ஐஏஎஸ் சங்கத்திற்கு கடிதம்

இந்த நிலையில் தான் பணியில் சேர்ந்த 50 நாட்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐஏஎஸ் சங்கத்திற்கு நேஹா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், “நான் எப்போதும் உத்தரவுகளை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த முறை நான் ஊக்கம் இழந்துவிட்டேன்.

கீழ்ப்படியாமை மற்றும் கோப்புகளை பதுக்கி வைத்திருப்பது குறித்து நான் புகார் அளித்தேன். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நான் நீக்கப்பட்டேன்.

கீழ்நிலை அதிகாரிகள் இடமாற்றங்களை தீர்மானிக்கும் அளவுக்கு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி பலவீனமாக இருக்க முடியுமா? என்று எனக்கு தெரியவில்லை.

இந்த பணியிட மாறுதலை அனுபவிக்க ஒரு மாதத்திற்குள் தான் என்ன செய்துவிட்டேன் என்று எனக்கு தெரியவில்லை.

ஒரு அதிகாரியால் ஒரு மாதத்தில் வேலையை புரிந்துகொள்வது என்பது அரிது. ஆனாலும், இந்த இடமாற்றத்தால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன்.

கீழ்நிலை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள்

தொடர்ச்சியான குறுகிய கால பதவிக் காலங்கள் தன்னை மனச்சோர்வடையச் செய்துவிட்டது.

நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக நான் பொறுமையாக இருந்தேன், ஆனால் இப்போது கீழ்நிலை அதிகாரிகள் என்னை மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

எப்போதும் சதிகாரர்களே வெற்றி பெறுகிறார்கள், நான் தோற்கிறேன்.

இந்த அமைப்பு என்னை கைவிட்டுவிட்டது. இன்று நான், நாளை மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி இலக்காக இருப்பார்,” என்று அவர் ஐஏஎஸ் சங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Source link