கார் வாங்கும் மக்களுக்கு கவலை தரும் வகையில் மாருதி சுஸுகி நிறுவனம் விலை உயர்வை அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று மதியம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 1 சதவீதம் அல்லது ஒரு பங்குக்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்தன. பிற்பகல் 1 மணி அளவில் மாருதி சுஸுகி நிறுவனப் பங்குகள் 0.76 சதவீதம் அல்லது பங்குக்கு 95 ரூபாய் உயர்ந்து 13,795 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டன. பங்குச் சந்தைக்கான அறிக்கையில் (exchange filing) நிறுவனம் சில தகவல்களை வெளியிட்டதைத் தொடர்ந்து இந்தப் பங்கு விலை மாற்றம் காணப்பட்டது.
கார் சந்தையில் முன்னணி நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் இன்று (செப்டம்பர் 7) தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாடல்களின் விலையை 20,000 ரூபாய் வரை உயர்த்துவதாக அறிவித்தது. இருப்பினும், எந்தெந்த கார்களின் விலை உயர்த்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உயர்த்தப்பட்ட விலைகள் இந்த மாதம் முதல் அமலுக்கு வரும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மே மாதத்திற்குப் பிறகு இந்நிறுவனம் மேற்கொள்ளும் மூன்றாவது விலை உயர்வு இதுவாகும். உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்க அழுத்தம் ஆகியவற்றையே இதற்குக் காரணமாக நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு முந்தைய இரண்டு விலை உயர்வுகளும் நிறுவனத்தின் அனைத்து மாடல்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருந்தன. பங்குச் சந்தை அறிக்கையில் மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம், “மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் விலையை 20,000 ரூபாய் வரை உயர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 2026 முதல் அமலுக்கு வரும்.” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகச் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம் அதிகரித்த செலவுகளின் தாக்கத்தை முடிந்தவரை குறைக்க மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் மேலும் கூறுகையில், “பணவீக்க அழுத்தம் அதிகமாகவே உள்ளது. செலவுச் சூழல் சாதகமற்ற நிலையிலேயே நீடிக்கிறது. இதன் விளைவாக, அதிகரித்த செலவுகளின் ஒரு பகுதியைச் சந்தையின் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், வாடிக்கையாளர்கள் மீதான தாக்கத்தைக் குறைந்தபட்ச அளவில் வைத்திருக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கவலை!
பொதுவாக, பண்டிகை சமயத்தில் பொதுமக்கள் கார் வாங்குவது, ஷாப்பிங் செய்வது போன்ற விஷயங்களுக்கு அதிகம் செலவு செய்வார்கள். அந்த நேரத்தில் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக விலைகளைக் குறைக்கும். இந்த ஆண்டு பண்டிகை சீசனினும் விலைக் குறைப்பு எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல, புதிதாக கார் வாங்க நினைப்பவர்களும் பண்டிகை கால சிறப்பு சலுகை மற்றும் ஆண்டு முடிவு விற்பனைச் சலுகைக்காக காத்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு கவலை தரும் வகையில் தற்போது கார் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களும் இதுபோன்ற விலை உயர்வை அறிவித்தால் அது வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
Source link
