தான் எப்படியும் படிக்கப்போவதில்லை; பிறருக்காவது உபயோகப்படட்டுமே..: அந்துமணி பதில்கள்

கல்லிடை சிவா, நெல்லை:

‘இந்தியாவிலேயே சுற்றுலா செல்லுங்கள்…’ என, பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? இந்தியாவிலேயே ரம்மியமான பல சுற்றுலாத்தலங்கள் உள்ளனவே. மேலும், பல நகரங்களில் வளர்ச்சியும் பார்க்க பிரமிப்பூட்டும் வகையில் உள்ளனவே.

அதை சுற்றி பார்க்கவே, நம் வாழ்நாள் சரியாக இருக்கும். நம் சுற்றுலாத்துறையும் மேம்படும். இதை தான் பிரதமர் கூறியுள்ளார்!

மூ.வள்ளி, வீரபாண்டி, கோவை:

‘சிங்கப்பூரில் குழந்தை பெற்றால், 53 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்…’ என அறிவித்துள்ளாரே, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வாங்?

நம் நாட்டிலும் அத்தகைய வாய்ப்பு ஏற்படலாம் என தோன்றுகிறது வள்ளி!

வி.ரெங்கநாதன், பொள்ளாச்சி:

‘இடைத்தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி கிடைக்கும்…’ என, தமாஷ் பண்ணுகிறாரே பழனிசாமி?

தமாஷ் என்று நீங்களே கூறிவிட்டீர்களே, ரெங்கநாதன். ‘டிவி’யில், ‘காமெடி’ பார்ப்பது போல், சிரித்து மகிழுங்கள்!

வ.முருகன், விழுப்புரம்:

‘நக்சல்களை ஒழித்தது போல், 2029க்குள், போதைப் பொருளையும் ஒழிப்போம்…’ என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளது பற்றி?

நக்சல் தீவிரவாதிகள், நம் நாட்டில் பல இடங்களில், நாச வேலைகளில் ஈடுபட்டு, பல இன்னல்களை செய்து கொண்டிருந்தனர். அமித் ஷா, அவர்களை இரும்பு கரம் கொண்டு கிடுக்கிபிடி போட்டு, ஆயுதங்களுடன் சரணடைய வைத்தார். அதேபோல், போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவையும் கொடுப்பார் என, எதிர்பார்ப்போம்!

பெ.வை.சே.கணேஷ் சுப்பிரமணி, பெரியகுளம்:

குப்பையை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்கின்றனரே… மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமா?

மக்களுக்கு, மட்கும் குப்பை, மட்காத குப்பை என, தரம் பிரித்து வைப்பதில் என்ன சிரமம் உள்ளது; மக்கள் கட்டாயமாக ஒத்துழைக்க வேண்டும். இல்லை எனில், பெருமழையால் வெள்ளம் போன்ற பேரிடர்களை சந்திக்க நேரிடும்!

மு.நாகூர், ராமநாதபுரம்:

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தனக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தகங்களை, தமிழகத்தில் உள்ள அனைத்து நுாலகங்கள், படிப்பகங்களுக்கு வழங்கியுள்ளாரே?

தான் எப்படியும் படிக்க போவதில்லை, பிறருக்காவது உபயோகப்படட்டுமே என்ற நல்லெண்ணம் தான்; மனதார பாராட்டுவோம்!

Source link