மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், இசையமைப்பாளர் இளையராஜாவை, முதல் பூஜைக்கான மணி ஒலிக்கும் முன்பே மூலஸ்தானத்திற்கு அழைத்துச்சென்ற பெண் எஸ்.ஐ.,யால் சர்ச்சை எழுந்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலில், தினமும் அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்படும். பக்தர்கள் சித்தி விநாயகர் சன்னிதி அருகே காத்திருப்பர். அதிகாலை, 5:00 மணிக்கு மணி ஒலித்ததும், அம்மனை தரிசிக்க மூலஸ்தானத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
தொடர்ந்து, திருவனந்தல் பூஜை நடைபெறும். இந்த நடைமுறை நுாற்றாண்டுகளை தாண்டி பின்பற்றப்படுகிறது. திருவனந்தல் பூஜையை காண்பதற்காகவே பக்தர்கள் ஒரு குழுவை ஏற்படுத்தி, தினமும் தரிசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை இசையமைப்பாளர் இளையராஜா மீனாட்சி கோவிலுக்கு வந்தார். அவருடன், பா.ஜ., கலாசாரப்பிரிவு மாநில செயலர் சசிகுமார் உள்ளிட்டோர் வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் எஸ்.ஐ., ஒருவர் உள்ளே அழைத்துச்சென்றார்.
மணி அடிக்கும் முன்பே இளையராஜாவை மூலஸ்தானத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு, 5 நிமிடங்கள் காத்திருந்த நிலையில் மணி ஒலித்தது. அதன் பிறகு அம்மனையும், சுவாமியையும் தரிசித்துவிட்டு அவர் புறப்பட்டார்.
மணி ஒலிப்பதற்கு முன்பே இளையராஜாவை பெண் எஸ்.ஐ., மூலஸ்தானத்திற்கு அழைத்துச் சென்றது குறித்து, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பக்தர்கள் புகார் கூறினர்.
