இந்த நிலையில் இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சி கொறடாவும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு, சட்ட ஒழுங்கு குறித்து முதல்வர் விஜயின் பதிலுரை குறித்து விமர்சனம் செய்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “இந்த பேரவைக்கு என்று சில மாண்புகள் இருக்கிறது. மானியக் கோரிக்கைகளில் அமைச்சர்கள் தாக்கல் செய்த பின் நடக்கும் விவாதத்தின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தான் பதில் அளித்திருக்கிறார்கள். இந்த மாமன்றத்தில் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முதலமைச்சராக இருந்து பணியாற்றிருக்கிறார்கள். காவல்துறையில் நாங்கள் பேசும் போது, அவர்கள் கண்ணியமிக்க பதிலை தான் அளிப்பார்கள்.
நேற்றைய தினம் முதல்வர் பேசும் போது சுமார் 26 நிமிடங்கள் வரை நாங்கள் அமைதி காத்தோம். எங்களுக்கு தந்திருக்கிற விதி புத்தகத்தில், நீதி விசாரணையில் இருக்கும் எப்பொருள் மீது தன்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கு இடம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் முதல்வர் பேசியதில், அமலாக்கத்துறை வழக்குத் தொடுத்து நீதிமன்றத்தில் அந்த விசாரணை இருக்கிறது. அப்படி இருக்கும் போது வழக்கு முழுவதையும் அவர் படிக்கிறார். அது அவையினுடைய மரபுக்கு மீறிய செயல், அது கண்ணியத்துக்குரிய செயல் இல்லை. எனவே அது விதிக்குட்பட்டதாக இல்லை என்பது திமுகவின் கருத்து. மிசா ஜனநாயகத்திற்கு எதிராக வந்தது. அதில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்டோர் சிறைக்கு போனார்கள், கைது செய்யப்பட்டவர்கள் ஏராளம்.
அதன்படி, எங்களுடைய தலைவர் மிசா கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு 1 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். பெரியார் கொள்கையை ஏற்று திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிற ஆசிரியர் வீரமணியுடன் அவர் இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் எங்களுடன் சிறையில் இருந்தார்கள். சர்க்காரியா கமிஷன் இந்த சட்டப்பேரவையில் பலமுறை பேசப்பட்டு கலைஞர் பல முறை பதிலளித்திருக்கிறார். அந்த சர்க்காரியா கமிஷனில் குறிப்பிடுகிற போது முரசொலி மாறனின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொதுவாக வெளியில் இருப்பவர்கள் பெயர்களை அவையில் பேசக்கூடாது என்ற விதி இருக்கிறது. அந்த கமிஷன் முடிகிற போது, 26 குற்றச்சாட்டுகளும் எந்த விதத்திலும் நிரூபிக்கப்படவில்லை, அதனால் வழக்குத் தொடர முடியாது என்று குறிப்பிடப்பட்டது. எனவே முதல்வர் பேசிய காவல்துறை தவிர ஆதாரமில்லாமலும், வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிற அத்தனை குறிப்புகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்று கூறினார்.
