தவெகவுக்கு காத்திருந்த அதிர்ச்சி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டம்!

த.வெ.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் வரும் 9ஆம் தேதி (09.09.2026) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனையொட்டி விசிக, ஐயூஎம்.எல். சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை தவெக அமைச்சர்கள் சந்தித்து  அதிகாரப்பூர்வ அழைப்பை நேரில் வழங்கினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், த.வெ.க தலைமையில் கூட்டணி அமைப்பது, கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டுவது, கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை முறைப்படி நியமிப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் வியூகங்கள் மற்றும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பேட்டியளித்த அவர், “தவெக தோழமை கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது. எந்த சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் சேர மாட்டோம். தவெகவை தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. அதனால் ஒரு ஆட்சி அமையாமல் போய்விடக்கூடாது என்பதற்காக நாங்கள் ஆதரவளித்தோம்.

நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை. கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் நாங்கள் போகவில்லை, பிறகு எப்படி இந்த கூட்டத்தில் போக முடியும்? எங்களைப் பொறுத்தவரையில் தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. இடதுசாரிகள் கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்திருக்கிறோம். தேர்தல் வருகிற போது அப்போதைய சூழ்நிலையை பொறுத்து முடிவு செய்வோம்” என்று கூறினார். 

Source link