சட்டமன்றத்தில் சர்காரியா கமிஷன் குறித்துப் பேசுபவர்கள், 1991-96 காலகட்டத்தில் நடைபெற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை குனியமுத்தூரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக சந்தித்த முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில், நிறைவாகக் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் என்ன பேசப் போகிறார் என்று ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம். கடந்த 4 மாத கால ஆட்சியில் சட்ட ஒழுங்கைப் பாதிக்கும் வகையிலான குற்றச் சம்பவங்கள், கொலை, கொள்ளை மற்றும் போதையினால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவில் நடந்துள்ளன. கொலைகளைத் தடுக்கவும், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பதை முதலமைச்சர் விளக்குவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இன்றைய சட்டமன்றத்தில் முதலமைச்சரின் பதிலுரை நாங்கள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை.
முழுக்க முழுக்க திமுகவை மட்டுமே குறிவைத்துத் தாக்குவதற்காக முதலமைச்சர் விஜய் இந்தச் சட்டமன்ற நிகழ்வைப் பயன்படுத்தியுள்ளார். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், தமிழகத்தில் திமுக மட்டுமே ஊழல் செய்துவிட்டதா? 1991-96 ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது டான்சி வழக்கு, பிளசண்ட் ஸ்டே வழக்குகள் போடப்பட்டு, இறுதியாகச் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றவர். ஊழலை மையமாக வைத்து முதலமைச்சர் விஜய் பேசும் பட்சத்தில், அவர் நடுநிலையோடு செயல்படுபவராக இருக்க வேண்டும்.”
முதலமைச்சர் விஜய் யாரை வைத்துக்கொண்டு தற்போது ஆட்சி நடத்துகிறார்? மு.க.ஸ்டாலினை முதல்வர் என முன்னிறுத்தி மக்களிடம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்களையும், விஜய்யை ‘ஆர்.எஸ்.எஸ் பிள்ளை’ என்று முத்திரையிட்டவர்களையும் தனது பக்கத்தில் வைத்துக்கொண்டு அவர் பேசுவது சரியாகத் தெரியவில்லை. அதிமுகவிலிருந்து விலகி வந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்றோரை வைத்துக்கொண்டு விஜய் ஊழல் எதிர்ப்பு பற்றிப் பேசுவது பொருத்தமாக இல்லை. தற்போதைய சட்டமன்ற நிகழ்வுகள் சினிமா பாணியில் காட்சியளிக்கின்றனவே தவிர, அவை மரபுப்படி அமையவில்லை.
ஜெயலலிதாவின் புராணத்தை இன்னும் எத்தனை முறை பாடிக்கொண்டிருப்பீர்கள்? இதன் மூலமாக அரசியல் லாபம் அடைய என்ன இருக்கிறது? தவெக ஆட்சியில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? அமலாக்கத்துறை போன்ற மத்தியப் புலனாய்வு முகமைகள் தாக்கல் செய்யும் ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருவரைக் குற்றவாளி என்றோ அல்லது நிரபராதி என்றோ முடிவு செய்துவிட முடியாது.
தமிழக அரசியல் என்பது வெறும் சட்டமன்றத்துடன் முடிந்துவிடாது; அதற்கு வெளியேதான் உண்மையான மக்கள் சக்தியும், மக்கள் மன்றமும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சட்டமன்றத்திற்குள் மட்டும் பேசுவதால் என்ன பயன் ஏற்பட்டுவிடப் போகிறது? வெறும் வாய்சவடால் எதற்கு? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டியதுதானே? இந்த வெற்றுப் பேச்சு அவரது ஆதரவாளர்களைக் குஷிப்படுத்துவதற்கு மட்டுமே பயன்படும். முதலமைச்சர் விஜய் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; அவரிடம் ஏதோ ஒரு பலவீனம் இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கும் உண்மையான எண்ணம் இருந்தால் துணிச்சலாக நடவடிக்கை எடுத்திருக்கலாம்; ஆனால் இதற்குப் பின்னால் வேறு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.
ஊழல் ஒழிப்பு என்றால் அது வெறும் திமுக எதிர்ப்பு மட்டும்தானா? முதலமைச்சரின் பேச்சு ஒருதலைபட்சமான பேச்சாகவும் செயல்பாடாகவும் இருக்கிறது. ஜெயலலிதா சிறையில் இருந்தது இவருக்குத் தெரியாதா? ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசுபவர்கள் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேச வேண்டும். சர்காரியாவைப் பற்றிப் பேசுபவர்கள், 1991-96-ல் நடைபெற்ற ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றி மட்டும் வாய் திறக்காதது ஏன்?”
விஜய் தான் முதலமைச்சராகிவிட்டோம் என்ற உணர்வோடு செயல்படுவதாகத் தெரியவில்லை. தேர்தல் கால ஆலோசகர்கள் மட்டுமே தற்போது அவரிடம் நெருக்கமாக இருக்கின்றனர். ஆட்சியில் ‘பவர் சென்டர்கள்’ (அதிகார மையங்கள்) உருவாவது நாட்டுக்கு ஆபத்தானது. மாநிலத்தின் ஐ.ஜி கூட முதலமைச்சரிடம் நேரடியாகத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை; வேறு சில நபர்கள் வழியாகவே தகவல்கள் சென்று, அவர்கள்தான் அந்தத் தகவல்களைத் திருத்தம் (Edit) செய்து முதலமைச்சரின் பார்வைக்குக் கொண்டு செல்கின்றனர். விஜய்க்குத் தான் ஒரு முதலமைச்சர் என்ற பொறுப்புணர்வும் சுயசிந்தனையும் வராமல் தடுப்பதே இந்த அதிகார மையங்கள்தான். இது முதலமைச்சரிடம் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு. சட்டமன்றத்தில் இன்று அவர் சரியாகச் செயல்படாமல் போனதற்கு இந்த அதிகார மையங்களின் தலையீடே முக்கியக் காரணம். தன்னிடம் பவர் சென்டர்கள் இல்லை என்று அவர் மறுக்கலாம்; ஆனால் கசப்பான உண்மை அதுதான் என்று குற்றம்சாட்டினார்.
