சபாநாயகர் பலமுறை எச்சரித்தும் பேரவையில் வெடித்த அமளி: தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கொறடா எ.வ.வேலு காரசாரமாக விவாதித்த நிலையில், அவையில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களைக் குண்டுக்கட்டாக வெளியேற்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்டார். த.வெ.க ஆட்சியில் எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (07.09.2026) காவல்துறை மீதான மானியக் கோரிக்கையில் பதிலுரை நிகழ்த்திய முதலமைச்சர் விஜய், சர்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறையின் அறிக்கைகளை வைத்து கடந்த கால தி.மு.க ஆட்சியில் நடந்த முறைகேடு குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு தி.மு.க-வைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். அதுமட்டுமில்லாமல், மிசா கைதுகள் குறித்தும் பேசினார். இதற்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் முழக்கமிட்டனர். முதலமைச்சர் விஜயின் பதிலுரை குறித்து தி.மு.க-வினர் பேசுவதற்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதிலளிக்காததால் தி.மு.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

இந்நிலையில், சட்டப்பேரவை இன்று (08.09.2026) கூடியதும் முதலமைச்சர் விஜய் தி.மு.க-வைத் தாக்கிப் பேசியது குறித்து தி.மு.க கொறடா எ.வ.வேலு பேசினார். 

தி.மு.க கொறடா எ.வ. வேலு பேசுகையில், இந்த பேரவைக்கு என்று சில மாண்புகள் இருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். மானிய கோரிக்கைகளை அமைச்சர்கள் பேரவையில் தாக்கல் செய்கிற போது விவாதத்திற்கு பின் பதிலளிக்கும் போது அமைச்சர்கள் துறை சம்பந்தப்பட்ட பதில்களைத் தான் இதுவரை அளித்திருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். என்னுடைய சட்டமன்ற வாழ்க்கையில் இந்த அவையில் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அம்மையார் ஜெயலலிதா, மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் எல்லாம் இந்த மாமன்றத்தில் முதலமைச்சராக இருந்து பணியாற்றி இருக்கிறார்கள். காவல்துறை மானிய கோரிக்கையில் நாங்கள் நிறைய பேசியிருக்கிறோம். அவைக் குறிப்பை எடுத்துப் பார்த்தால் உங்களுக்கு தெரியும். ஆனால், அவர்கள் தனிப்பட்ட பதிலைத்தான் அளிப்பார்கள். நாங்களும் சில குறைகளை சுட்டிக்காட்டி தான் பேசுவோம். அதற்கு தான் அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. நேற்றைய தினம் முதலமைச்சர் விஜய் பேசியபோது ஏறத்தாழ 26 நிமிடம் நாங்கள் அமைதி காத்தோம்” என்று பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “அந்த விளக்கம் எல்லாம் வேண்டாம் உங்களுக்கு நீங்கள் குறிப்பிட்டு பேசுவதற்கு அனுமதித்தோம் இதில் உங்களுக்கு என்ன விஷயம் இருக்கிறது” என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க கொறடா எ.வ.வேலு, “நீங்கள் எங்களுக்கு தந்திருக்கிற விதி புத்தகத்தில் விதி 92-ல் நீதி விசாரணை இருக்கும் எப்பொருள் மீதும் தன்னுடைய கருத்தை சொல்வதற்கும் அப்பொருள் குறித்து பேசுவதற்கும் இடமில்லை என்று நீங்கள் கொடுத்திருக்கிற புத்தகத்தில் இருக்கிறது. நேற்று முதலமைச்சர் விஜய் பேசியிருக்கிற முழு பேச்சை எடுத்துப் பார்த்தால் இ.டி தொடர்ந்திருக்கிற வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறபோது ஆவணத்தில் இருந்து சில தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அல்லவா என்று வழக்கை முழுவதும் இந்த அவையில் படிக்கிறார். அது அவையின் மரபுக்கு மீறிய செயல்தான். அது கண்ணியத்திற்குரிய செயல் இல்லை, எனவே அது விதிக்கு உட்பட்டதாக இல்லை என்பது தி.மு.கவின் கருத்து.

மிசா என்பது தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரிந்தது. மிசா என்கிற கொடுமை ஜனநாயகத்திற்கு எதிராக வந்தது. அப்போது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்டோர் சிறைக்கு சென்றார்கள். கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏராளம். அந்த வகையில்தான் இந்த ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக அன்றைக்கு தி.மு.க தலைவர் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 60 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர், அவர் விசா கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தார். அப்படிப்பட்ட ஜனநாயக போராட்டத்தில் ஈடுபட்டவர் மு.க. ஸ்டாலின்.

பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் விஜய் என்று எ.வ. வேலு பேசியபோது, குறிப்பிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அந்த விளக்கம் எல்லாம் வேண்டாம், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் அந்த விவரங்களுக்குள் எல்லாம் போக வேண்டாம் உங்களை குறிப்பிட்டு பேச சொல்லி விட்டேன் என்ன சொல்ல வேண்டுமோ அதை சொல்லிவிட்டு அமருங்கள் என்று கூறினார். 

அப்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அவை முன்னவர் செங்கோட்டையனை பேச அனுமதித்தார். அமைச்சரும் அவை முன்னவருமான செங்கோட்டையன் பேசுகையில், “முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகிறபோது விளக்கமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு குறிப்பிட்டு பேச அனுமதி இருக்கிறது. அவர் குறிப்பிட்டு பேசலாம். குறிப்பிட்டு பேச அனுமதி கொடுத்திருக்கிறார்களே தவிர அவர் விளக்கமாக பேசினால் நாங்கள் மறுபடியும் சொல்ல வேண்டி இருக்கும்” என்று கூறினார்.

இதையடுத்து தி.மு.க உறுப்பினர் எ.வ.வேலுவை சுருக்கமாக கூற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அழைத்தார். தொடர்ந்து பேசிய எ.வ.வேலு பெரியாருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டு இன்றைக்கு அதற்கு பின்னால் திராவிட இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிற ஆசிரியர் கீ வீரமணி கூட இந்த மிசா கொடுமையில் ஸ்டாலினோரு இருந்தார்.” என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “வேண்டாம், யார் யார் இருந்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். நேற்றைய முதலமைச்சர் விஜய் உரையில் இதை நீங்கள் சொல்லியிருக்க வேண்டாம் என்று ஏதாவது ஒரு விஷயத்தை குறிப்பிட்டு பேசுவீர்கள் என்று நான் உங்களை அனுமதித்தேன். அதை குறிப்பிடுங்கள் நான் பதில் சொல்கிறேன். அப்புறம் அவை முன்னவர் சொல்லட்டும். சட்ட அமைச்சர் சொல்லட்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, சர்க்காரியா கமிஷன் பற்றி இந்த சட்டப்பேரவையில் பலமுறை பேசப்பட்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது அவரே பதில் சொல்லியிருக்கிறார். அதை மறுக்க முடியாது. ஆனால், அந்த சர்க்காரியா கமிஷனை பேசுகிற பொழுது உலகத்தில் இந்தியாவுக்கே புகழ் சேர்த்த மாறனுடைய பெயர் நேற்று இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. பொதுவாக வெளியில் இருக்கிற யாருடைய பெயரையும் சட்டமன்றத்தில் பேசக்கூடாது. அவர்கள் பதில் சொல்வதற்கு வாய்ப்பு இல்லை, அதனால் பேசக்கூடாது என்று ஒரு வீடியோ இருக்கிறது. அதோடு மட்டுமில்ல, அவர் இறந்தவர், அவர் புகழ் சேர்த்தவர். 

அந்த சர்க்காரியா கமிஷனில் என்ன நடந்தது என்று சொன்னால், அந்த கமிஷன் காலம் முடிகிற பொழுது, நிறைவாக சர்க்காரியா கமிஷனுடைய நீதிபதியாக இருந்த சர்க்காரியா என்ன கூறினார் என்றால், 28 குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது அந்த 28 குற்றச்சாட்டுகளில், விசாரணைக்கு கூப்பிடுகிற பொழுது எம்.ஜி.ஆர் அந்த விசாரணைக்கு போகிறார். 

விசாரணைக்கு போகிறபோது எம்.ஜி.ஆர் சொன்னார், “எனக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியாது. சேலத்தில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் இயக்கத்தைச் சார்ந்தவர் கொடுத்தார். அதை வைத்து நான் சொல்லி விட்டேன். இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று தான் சொல்லிவிட்டு வந்தார். நிறைவாக சர்க்கார் அந்த கமிஷனை முடிக்கிறபோது, 28 குற்றச்சாட்டுகள் எந்த விதத்திலும் நிரூபிக்கப்படவில்லை அதனால். வழக்கு தொடர முடியாது என்றுதான் அவர் முடித்தார். ஒரு கமிஷன் எதற்கு போடுகிறார்கள் என்றால் வழக்கு தொடர்வதற்கு முன்னால் அந்த கமிஷனில் ஏதாவது ஆதாரம் இருக்கும் என்று சொன்னால்தான் அதற்கு பின்னால் எஃப்.ஐ.ஆர் போட்டு, சார்ஜ் சீட் போட்டு வழக்குக்கு செல்ல முடியும். ஆனால், சர்க்காரியா கமிஷன் எந்தவித ஆதாரமும் முகாந்திரமும் இல்லை, இது வழக்கு தொடர முடியாது என்று சொல்லி அவரே முடித்து விட்டதை இங்கு ஏதோ தவறு நடந்தது போலவும் அதில் மாறன் அவர்களைப் பற்றி பேசுகிறார்” என்று  எ.வ.வேலூ கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “நீங்கள் 3 விஷயங்களை சொல்லி விட்டீர்கள். நான் அதற்கு விளக்கம் சொல்கிறேன்” என்றார்.

அப்போது சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் குரல் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நேற்றும் இதே மாதிரி தான் செய்தீர்கள், இன்றும் இதே மாதிரி தான் செய்கிறீர்கள். இது முறையல்ல. நான் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய தி.மு.க கொறடா எ.வ.வேலு பேசுகையில், மாறனை பற்றி சொல்லும்போது தனிப்பட்ட முறையில் நான் சொல்ல விரும்புவது முதலமைச்சர் விஜய்க்கு மாறன் குடும்பம் மிக மிக வேண்டிய குடும்பம். அவருடைய கலை பயணத்தில் அந்த குடும்பத்துடைய தயாரிப்பு நிறுவனத்தில் பல படங்களில் நடித்திருக்கிறார். அவரை வைத்து டெல்லியில் சென்று மாறன் தபால் தலையை கூட அவர்கள் வெளியிட்டார்கள் என்று கூறினார்.

அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், நீங்கள் சொல்லுகிற எல்லா வரலாறும் எல்லாருக்கும் தெரியும். நீங்கள் சொல்ல வந்த கருத்து எனக்கு தெரியும். நான் சொல்லுகிறேன் உங்கள் பேச்சை முடியுங்கள்” என்று கூறினார். 

அப்போது தி.மு.க உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்து குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, “மாண்பு நிறைந்த இந்த சட்டமன்றத்திலே நேற்றைய தினம் முதலமைச்சர் விஜய் இப்படி ஆதாரமில்லாமல் வெளியில் இருப்பவர்களை பற்றி எல்லாம் இங்கே குறிப்பிட்டு சொல்லி இருக்கிற காரணத்தினால் பேரவை தலைவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிற இந்த மாமன்றத்தில் அவர் பேசிய அத்தனையும் அத்தனை குறிப்புகளும் இப்படி திட்டமிட்டு ஆதாரமில்லாமல் அதே நேரத்தில் வழக்கு மன்றத்திலிருக்கிறது. இப்படி தனிப்பட்ட முறையில் மாறன் போன்றவர்களைப் பற்றியும் பட்டியலிட்டு வாசித்ததை எல்லாம் இந்த அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று எ.வ.வேலு கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், “மிசாவில் யார் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்பட்டிருக்கலாம். மிசா காலங்களில் திருட்டு வழக்கு, வழிப்பறி வழக்கு, பெண்கள் வன்கொடுமை வழக்கு என கைது செய்யப்பட்டிருக்கலாம். அவர்கள் எல்லாமே மிசாவில் கைது செய்யப்பட்டவர்கள் என்று பரிசீலனை செய்ய முடியாது. மிசாவில் வழிப்பறி வழக்கும் இருக்கும், பெண்கள் குறித்து வழக்கும் இருக்கும், 20 அம்ச திட்டத்தை அறிவித்த இந்திரா காந்தி அம்மையாரை, 21 அம்ச திட்டம் என்று சொல்லி அவதூறாக பேசியவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின். 21 அம்ச திட்டம் என்று அவதூறாக சொல்லி பல விஷயங்களைப் பேசிய அடிப்படையில்தான் கைது செய்யப்பட்டார். அதில் நிறைய விஷயங்கள் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டார் என்று தான் இருக்குமே தவிர, மிசா குறித்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்று எந்த குறிப்பிலும் கிடையாது அம்ச திட்டம் என்று இந்திரா காந்தி அம்மையாரை குறித்து அவதூறாக பேசியிருக்கிறார் என்று எந்த குறிப்பிலும் கிடையாது. அதனால், தேவை இல்லாமல் பழையதை எல்லாம் கிளறி இன்னும் நீங்கள் உங்களை குறித்து உங்களுடைய நிலை குறித்து தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறீர்கள். அன்றைக்கு அவர் என்ன செய்தாரோ அதைத்தான் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் செய்து கொண்டிருக்கிறார். அதுதான் ஆபாச நதியாக ஓடிக் கொண்டிருக்கிறது அதை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் முதல்வர் விஜய் கண்ணியமாக அவர்களுக்கு எடுத்துரைத்தார். அதை அவர்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இதே மாதிரி கத்திக் கொண்டிருந்தால், மக்கள் இதை நேரலையில் பார்ப்பார்கள். இன்றும் நேரலையில் பார்ப்பார்கள். இன்னும் நீங்கள் பேச பேச உங்கள் நிலைமை குறித்து எல்லாம் வெளிவரும் இதில் மாற்று கருத்து இல்லை” என்று நிர்மல் குமார் பேசினார்.

சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரின் பேச்சைக் கேட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கொந்தளித்தனர். சி.டி.ஆர். நிர்மல் குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை பரபரப்பாக காணப்பட்டது.

இதையடுத்து, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், அமளியில் ஈடுபட்ட தி.மு.க உறுப்பினர்களை அவையில் இருந்து வெளியேற்ற அவை பாதுகாவலர்களுக்கு உத்தரவிட்டார். அவை காவலர்கள், அமளியில் ஈடுபட்ட தி.மு.க உறுப்பினர்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க ஆட்சியில், சட்டப்பேரவையில் முதல்முறையாக எதிர்க்கட்சியினர் வெளியேற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “இப்போதும் என் மீது என்ன தவறு இருக்க முடியும் என்று சிந்தித்துப் பாருங்கள். அவர்களை பேச அனுமதித்தது ஒன்றுதான் குற்றமா? அவர்கள் என்ன பேசுவார்கள் என்று தெரியாமல் தான் நான் அனுமதித்தேன். அப்படி பேச வருகிற போது சொன்னதை அனுமதித்து அதற்கு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமாக விரிவாக ஒரு பதிலளித்தார். அவை முன்னவர் செங்கோட்டையன் பதிலளித்தார். பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார். அதன் பிறகு நான் அவை குறிப்பில் இருந்து எதையும் நீக்க முடியாது. அதற்கான காரணத்தையும் நான் சொல்லி விட்டேன். ஏனென்றால், விதிகளுக்கு புறம்பாக முதலமைச்சர் எதையும் பேசவில்லை என்பதை நான் பதிவு செய்கிறேன். விதிகளுக்கு உட்பட்டு தகுந்த ஆதாரங்களை வெளியிட்டு அவர் பேசினார். அவர் பேசியதில் நீக்கப்பட வேண்டிய பகுதி எதுவும் இல்லை என்ற காரணத்தினால் அதை நீக்க முடியாது என்பதை நான் தீர்ப்பாக சொல்லி, அதற்கு பின்னாலும் மதியம் 1:30 மணிக்கு எல்லாம் மானியக் கோரிக்கைகளை முடித்தாக வேண்டும் நேரத்தைக் கருதி முடித்தாக வேண்டும். இருந்தாலும் முன்னாள் அமைச்சர்களை கொண்டுள்ள ஒரு கட்சி, மூத்த உறுப்பினர்களை கொண்டுள்ள ஒரு கட்சி, சிறந்த முறையில் இந்த சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்திருக்கிற ஒரு கட்சி, அந்த கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் மேற்கொண்டு சபையை நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் செயல்படுவதாக இருந்தால் அவர்களை வெளியேற்றுங்கள் என்று சொல்வதை தவிர எனக்கு வேறு என்ன வாய்ப்பு இருக்கிறது நான் என்ன செய்ய முடியும்.

ஒன்று சட்டமன்ற உறுப்பினர் எ.வ.வேலு பேசுங்கள் உங்களுக்கு அனுமதி தருகிறேன். மற்றவர்கள் எல்லாம் போய் இருக்கையில் உட்காருங்கள். அவர் பேசட்டும் அவர் பேசுவதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தருகிறேன். அவர் பேசி முடித்த பிறகு மேற்கொண்டு விவாதத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நான் சொல்லிப் பார்த்து விட்டேன். அப்போது அவர்கள் பேசுவதற்கும் தயாராக இல்லை. என்னுடைய தீர்ப்பை ஒட்டி அவர்கள் அதை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராக இல்லை. அதைவிட முக்கியமானது, அவையை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டே இருந்தால், நான் என்ன செய்ய முடியும்? மானிய கோரிக்கைகளை 1:30 மணிக்கு எல்லாம் முடிக்க வேண்டும் என்று நேற்றே தகவல் சொல்லி, அவையை விரைவாக முடிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அனைவரும் ஒன்று கூடி இருக்கிறோம். இந்த அவையை மேற்கொண்டு நடத்த விடாமல் தடுக்கும் செயல்தான் என் உள்ளத்தை வருத்தப்படுத்தியது. உங்கள் அனைவருக்கும் (த.வெ.க உறுப்பினர்கள்) இந்த பக்கம் இருக்கும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் அமைதி காத்தீர்கள். இதுதான் உங்கள் தலைவர் கற்றுத் தந்திருக்கிற நல்ல பண்பு என்று நான் பாராட்டுகிறேன். அதேபோல், அ.தி.மு.க உறுப்பினர்களையும் பாராட்டுகிறேன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னதான் நடக்கிறது நடக்கட்டுமே என்று பார்த்துக் கொண்டிருந்தார். அவரையும் நான் பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது என் முன்னாள் இருக்கும் ஒரு கேள்வி அவர்களை வெளியேற்றியது சரியா, தவறா என்பது அல்ல. நான் வெளியேற்றியது சரிதான். அவையின் மாண்புதான் எனக்கு முக்கியமே தவிர, அவை நடவடிக்கைகள் தான் முக்கியமே தவிர, அவர்களை வெளியேற்றியதில் எந்த விதமான தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனென்றால் நாம் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். இது நமக்கு மட்டுமே பதில் சொல்கிற அவை அல்ல, நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம், என்றால் நம்மையெல்லாம் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கி இருக்கிற மக்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். அவர்கள் என்ன நினைப்பார்கள்.

அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கேட்டீர்கள் நீக்க இயலாது என்பதற்கான காரணத்தை நான் சொன்னேன். அமைச்சர்கள் விளக்கம் அளித்தாலும் அதற்கு பின்னாலும் இந்த அவையை நடத்த விடாமல் செய்த அந்த செய்திக்காக நான் அவர்களை வெளியேற்றி இருக்கிறேன் அவையை 1:30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று கருத்தில் கொண்டு உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்” என்று ஜே.சி.டி. பிரபாகர் கூறினார்.

இதையடுத்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அண்ணாவின் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற என்ற வாக்கியத்துடன் எப்போதும் நாங்கள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு சில நேரங்களில் உணர்ச்சி மிகுந்து நாங்கள் தவறு செய்தால் கூட நீங்கள் சுட்டிக் காட்டும்போது நாங்கள் உங்களுடைய வழியில் அதை ஏற்றுக் கொண்டு அமைதி காக்கக்கூடிய இந்த கண்ணியமான அவையில் முதலமைச்சர் விஜயின் வழியில் அந்த மாண்பையும் எப்பொழுதும் உறுதியுடன் நாங்கள் உங்களை பின்பற்றுவோம் என்று உறுதி கூறுகிறேன்” என்று அமைச்சர் ஆதார் அர்ஜுனா பேசினார்.

Source link