பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதுப்படம் உருவாகி வருகிறது. டிராமா கம்பெனி வழங்கும் இப்படத்தின் மூலம் கவுதம் சிவராமன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஷிவானி நாகரம் கதாநாயகியாக நடிக்கிறார். யோகலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பிரபல பாடகர் கானா வினோத் இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. ‘பிக்காசோ’ (‘PICASSO’) என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார். வித்தியாசமான காட்சியமைப்புடன் வெளியாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிவராஜ்குமாரும் அபிஷன் ஜீவிந்த்தும் பாரம்பரிய வெள்ளை உடையில், வெடித்த பட்டாசுகளின் நடுவே அமர்ந்திருக்கும் வகையில் இந்த ஃபர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருவரின் இயல்பான, குறும்புத்தனமான தோற்றமும், அவர்களைச் சுற்றியுள்ள வெடித்த பட்டாசுகளும் மாறுபட்ட காட்சியமைப்பை உருவாக்குகின்றன.
மேலும், ‘பிக்காசோ’ என்ற தலைப்பு கையால் வரையப்பட்ட மஞ்சள் நிற எழுத்துக்களில் இடம்பெற்றிருப்பது ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கலைநயமிக்க தோற்றத்தை வழங்குகிறது. படத்தின் கதையும் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான அணுகுமுறையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் இந்த ஃபர்ஸ்ட் லுக் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த இரு நடிகர்களின் திரை இணைவு, ‘பிக்காசோ’ படத்தை சுவாரஸ்யமான திரைப்படமாக மாற்றியுள்ளது.
