கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 2024 ஆண்டு ஜூன் மாதம் விஷச்சாராயம் அருந்திய சுமார் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்திருந்தனர். விஷச்சாராய விற்பனை மற்றும் கடத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மொத்தம் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த வழக்கு தற்பொழுது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கும் நிலையில் வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, கண்ணுக்குட்டியின் மனைவி விஜயா, கண்ணுகுட்டியின் சகோதரர் தாமோதரன், பரமசிவம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் மதுவிலக்கு, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளிடம் அலட்சியமும், கடமை தவறிய போக்குமே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் உட்கொண்டு பலர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடந்த திமுக அரசு அமைந்திருந்த ஓய்வுப் பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஆணையம் இன்று இறுதி அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், ‘மதுவிலக்கு, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் எந்தவித முன்னெச்சரிக்கை எடுக்காததால் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கச்சிராப்பாளையம் காவல் நிலையங்களில பணிபுரிந்த காவல் துறையினரும், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மேற்கொண்ட பகுதிகளில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சிரியர்கள் இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள். இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அலட்சியமும், கடமை தவறிய போக்கும் இருந்துள்ளது. உயிர்கொல்லி வேதியியல் பொருளான மெத்தனாலை சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு கொண்டு வந்து மேலும் சில திரவங்களை கலந்து அருந்தியுள்ளது உயிரிழப்புக்கு காரணமாக இருந்துள்ளது.
காவல், வருவாய்த்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவே உயிரிழப்புகள் அதிகரிக்க வழிவகுத்தது. பாதிப்பு சம்பவம் தெரிந்தவுடன் கள்ளச்சாராயம் புழங்கும் பகுதிகளில் அதிகாரிகளால் எச்சரிக்கை வழங்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை செய்யாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து 2023 முதல் 2024 வரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியாற்றிய துறை சார்ந்த அதிகாரிகள் மீது விசாரணை தொடங்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
