IPL 2027 – கே.எல்.ராகுல் எந்த அணிக்கு ஆடப் போகிறார்? உறுதி செய்த டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர் – kl rahul ipl team for upcoming season delhi capitals owner answered

லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக் கேப்டன் ரிஷப் பந்த், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், மாற்றாக குல்தீப் யாதவை லக்னோ அணிக்கு, டெல்லி கேபிடல்ஸ் அனுப்பி வைக்க உள்ளது.

ரிஷப் பந்த் அணிக்குள் வந்தால், கே.எல்.ராகுலுக்கு விக்கெட் கீப்பர் இடம் கிடைக்காது. கே.எல்.ராகுல், இன்னமும் இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையில் இருப்பதால், அவர் ஐபிஎலில் விக்கெட் கீப்பராகதான் ஆட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால், ரிஷப் பந்த் டெல்லி அணிக்கு வந்துவிட்டால், கே.எல்.ராகுல் டிரேடிங்கில் வெளியேறி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி உரிமையாளர் பர்த் ஜண்டால், எக்ஸ் பக்கத்தில், கே.எல்.ராகுல் விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘கே.எல்.ராகுல் மிகவும் இனிமையானவர். எப்போதுமே, தன்னைவிட அணியின் நலன்தான் முக்கியம் எனக் கருதுபவர். கே.எல்.ராகுலுடன் நீண்ட கால உறவை வைத்துக் கொள்ள விரும்புகிறோம். ஒன்றாக இணைந்து, டெல்லி கேபிடல்ஸ் அணியை பெருமைப்படுத்த கடினமாக உழைப்போம்’’ எனத் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள கே.எல்.ராகுல், ‘‘மிகவும் நன்றி, அடுத்த சீசனை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார். இதன்மூலம், ஐபிஎல் 2027 சீசன் மட்டுமல்ல, கே.எல்.ராகுல் ஓய்வுபெறும்வரை டெல்லி அணிக்காகதான் விளையாடப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

நிலைமை உணர்ந்த கே.எல்.ராகுல்? கே.எல்.ராகுலுக்கு தற்போது 34 வயதாகிறது. தற்போது, டி20 அணியில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், பிரப்சிம்ரன் சிங் போன்றவர்களுக்கு இடையில், விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், ரிஷப் பந்தை கூட டி20 அணியில் சேர்க்க முடியாத நிலைமை இருக்கிறது. ஆகையால், கே.எல்.ராகுலுக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்தான்.

இதனால்தான், ரிஷப் பந்திற்கு விக்கெட் கீப்பர் இடத்தை விட்டுக்கொடுக்க கே.எல்.ராகுல் சம்மதம் தெரிவித்திருப்பதாக கருதப்படுகிறது. இதனால்தான், கே.எல்.ராகுல் எப்போதுமே தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அணியின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என டெல்லி கேபிடல்ஸ் உரிமையாளர் பதிவிட்டிருப்பதாக கருதப்படுகிறது.

கே.எல்.ராகுல், டெல்லி கேபிடல்ஸ் அணியில், 14 கோடி மதிப்பில் இருக்கிறார். இவர், ஐபிஎல் 2025 சீசனில் 539 ரன்களை அடித்த நிலையில், கடந்த சீசனில் 593 ரன்களை குவித்தார். இப்படி, இரண்டு சீசன்களிலும் பெரிய ரன்களை அடித்து, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். ரிஷப் பந்தும் அணியில் இணைந்தால், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மேலும் பலம் கூடும்.

குல்தீப் யாதவை டிரேடிங்கில் அனுப்ப உள்ளதால், மாற்றாக தரமான முழுநேர ஸ்பின்னரை டிரேடிங்கிலோ அல்லது ஏலத்திலோ வாங்க வேண்டிய கட்டாயத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link