எதேச்சையாக வெளிப்பட்டது.. கடும் எதிர்ப்பை கிளப்பிய உடல்மொழி: முதல்வர் விஜய் அளித்த விளக்கம் – cm vijay explanation his body language he displayed during his reply speech in assembly

நேற்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் பதிலுரை ஆற்றிய போது, அவர் காட்டிய உடல்மொழி அரசியல் வட்டாரத்தில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியுள்ளது. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள கட்சிகளான கம்யூனிஸ்ட்களும் முதல்வரின் செய்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் மிகப்பெரிய அளவில் சர்ச்சைகளை கிளப்பிய தன்னுடைய உடல்மொழி குறித்து முதல்வர் ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

காவல்துறை மானிய கோரிக்கையின் போது எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் ஜோசப் விஜய் நேற்றைய தினம் பேரவையில் உரையாற்றினார். அப்போது மிசா குறித்து அவர் பேசுகையில், தன்னுடைய தாடையில் கை வைத்து சைகை ஒன்றை காண்பித்தார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி கொண்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சரான திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் மிசாவில் கைதாகி சிறை சென்றார்.

அப்போது அவர் காவல்துறையால் தாக்கப்பட்டதை கேலி செய்யும் விதமாக முதல்வரின் சைகை அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. அதோடு விஜய்யின் அந்த செய்கைக்காக திமுகவினர் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் தான் முதல்வர் ஜோசப் விஜய் தன்னுடைய சைகைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையின் போது, சட்டமன்றத்தில் என்னுடைய பதிலுரையின் போது வெளியான என்னுடைய உடல்மொழி என்பது எதேச்சையானது தான் என தெரிவித்துள்ளார் விஜய். அதோடு அவரின் சைகை எந்த வகையிலும் உள்நோக்கம் கொண்டது அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, யாரையும் தனிப்பட்ட முறையில் மனதை புண்படுத்துகிற செயலாக தன்னுடைய சைகையை அர்த்தம் கொள்ள வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் தனது பதிவில் விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய். பதிலுரையின் போது வெளிப்பட்ட அவரின் உடல்மொழி மற்றும் சைகைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தற்போது முதல்வர் விஜய் தரப்பில் இருந்து இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அவருடைய பதிவுக்கு கீழ் தவெகவினர் கமெண்ட்களை குவித்து கொண்டிருக்கின்றனர். அதே நேரம் வேண்டுமென்றே திமுக தலைவரை கிண்டலடித்து, சர்ச்சைகள் கிளம்பியதும் விளக்கம் அளித்துள்ளதாக முதல்வரின் பதிவிற்கு கீழ் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் விஜய் பகிர்ந்துள்ள இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனங்களை ஈர்த்து கொண்டிருக்கிறது.

Source link