“எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை” – முதல்வர் விஜய் விளக்கம்!

சட்டமன்றத்தில் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் பேசிய உடல்மொழிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அதாவது அவசரநிலை பிரகடனக் காலத்தில் இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நடைபெற்ற போராட்டத்தின் போது, மு.க.ஸ்டாலின் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். 

இந்தச் சூழலில், மக்கள் நலத் திட்டங்களைப் பற்றி விவாதிக்க வேண்டிய சட்டமன்றத்தில், முதலமைச்சர் விஜய்யே, பகடி செய்யும் வகையில் சைகை காட்டிப் பேசியது மிகவும் பொறுப்பற்ற செயல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வன்மையாகக் கண்டித்துள்ளார். அதே சமயம் உருவக் கேலி மற்றும் தனிமனிதத் தாக்குதல்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் அதனை ஜனநாயக அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் சட்டமன்ற நேரத்தைப் பழிவாங்கும் அரசியலுக்காகவும், சுய பெருமைக்காகவும் வீணடிப்பது அறமற்ற செயல் என்றும் பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவில், “சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link