உங்கள மாதிரி ட்ரெஸ் பண்ணா என் மார்க்கெட் டவுன் சார்; பிக்பாஸ் தொகுப்பாளர்கள் சந்திப்பு வீடியோவில் நடந்த சுவாரஸ்யம்

பிக்பாஸ் தமிழ் 10-வது சீசன் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில், மலையாளம் தொகுப்பாளர் மோகன்லால், தெலுங்கு தொகுப்பாளர் நாகர்ஜூனா, கன்னட தொகுப்பாளர் சுதீப் ஆகியோரின் வீடியோ சந்திப்பு பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. 

பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை காணாத வகையில், மிகவும் அரியதும் சுவாரஸ்யமானதுமான ஒரு நட்சத்திரச் சந்திப்புக்கு இந்த ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.. தென்னிந்தியாவின் 4 சூப்பர் ஸ்டார் தொகுப்பாளர்களான மோகன்லால் (மலையாளம்), நாகார்ஜுனா (தெலுங்கு), விஜய் சேதுபதி (தமிழ்), கிச்சா சுதீப் (கன்னடம்) ஆகியோர் ஒரே நேரத்தில் ஒரே பிரேமில், ஒன்றாக இணைந்தனர். 

பிக் பாஸ் மலையாளம் சீசன் 8-ன் பிரீமியர் நிகழ்ச்சியின்போது, மோகன்லாலுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த நட்புரீதியான உரையாடல் சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரலானது. தென்னிந்தியாவின் 4 முக்கிய மொழிகளிலும் புதிய பிக் பாஸ் சீசன்கள் ஒரே நாளில், ஒரே நேரத்தில் தொடங்குவது நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவே முதல்முறை என்று கிச்சா சுதீப் குறிப்பிட்டார். 

4 பேரும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், பாராட்டியும் கேலியாகக் கிண்டல்செய்தும் நட்சத்திரங்கள் பகிர்ந்துகொண்ட நட்பான தருணங்கள் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின. நாகார்ஜுனா, விஜய் சேதுபதி மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் கிளாசிக் கோட் மற்றும் சூட் அணிந்து மேற்கத்திய தோற்றத்தில் வந்திருந்த நிலையில், மோகன்லால் பாரம்பரிய முந்து மற்றும் குர்தா அணிந்து, கேரளத்து மாஸ் லுக்கில் தோன்றினார்.

மோகன்லாலின் டிரிம் செய்யப்பட்ட மீசையையும் அவரது தோற்றத்தையும் விஜய் சேதுபதி வெகுவாகப் பாராட்டத் தவறவில்லை. “மீசை சூப்பராக இருக்கிறது சார்” என்று சேதுபதி கூறியபோது, அதற்கு மோகன்லால் பாசத்துடன், “மீசை இல்லாமல்கூட விஜய் அழகாக இருக்கிறார்” என்று பதிலளித்தார்.
அதைத்தொடர்ந்து, “வயதாக வயதாக லால் சார் இன்னும் சின்ன பையனாகத்தான் (இளமையாகத்தான்) ஆகிக்கொண்டிருக்கிறார் போல” என்று சேதுபதி கூறியது மேடையில் சிரிப்பை ஏற்படுத்தியது.

மோகன்லாலின் வேஷ்டி (முந்து) தோற்றத்தைப் பாராட்டிய கிச்சா சுதீப்பும் உரையாடலில் இணைந்துகொண்டார். விஜய் சேதுபதியும் சுதீப்பும் ஒரே மாதிரியான பிளேசர்களை அணிந்திருப்பதை மோகன்லால் சுட்டிக்காட்டியபோது, கிச்சா சுதீப் சிரிப்பை வரவழைக்கும் வகையில் பதிலளித்தார்: அதில் “நான் இப்படி கோட் அணிந்துகொண்டு வந்திருப்பதால்தான் சார், எனக்கும் கொஞ்சமாவது அழகாகத் தெரிகிறது. உங்களைப் போல நானும் முந்து அணிந்துகொண்டு வந்திருந்தால், என்னுடைய மார்க்கெட்டே அத்தோடு சரிந்துவிடும் சார் என்று கூறியிருந்தார்.

மொழி எல்லைகளையே மறக்கச் செய்த நட்பும், சூப்பர் ஸ்டார்களின் நகைச்சுவையும் நிறைந்த இந்த அரிய தருணம், பிக் பாஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

Source link