தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சி அமைத்துள்ளது. 2-வது இடத்தில் திமுகவும், 3-வது இடத்தில் அதிமுகவும் இடம்பெற்றன. இந்தச் சூழலில், முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்
இதனைத் தொடர்ந்து, அதிமுகவில் வெடித்த உட்கட்சி மோதல் காரணமாக கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளும் தனித்தொகுதிகளாகும். இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகியவை தனித்தொகுதிகள் என்பதால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளும் அதிமுகவின் கோட்டையாகப் பார்க்கப்படுகின்றன.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில்அதிமுக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் கௌரி சித்ரா 46,438 வாக்குகளைப் பெற்று 3-வது இடத்தைப் பிடித்தார்.
தவெக vs அதிமுக மோதல் எப்படி இருக்கும்?
அதேபோல், மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல், தவெக வேட்பாளரை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக 7 முறை வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், தவெக ஆட்சி அமைத்ததும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. இதன் காரணமாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். அவர்களில் தாராபுரம் தொகுதி சத்யபாமா மற்றும் மதுராந்தகம் தொகுதி மரகதம் குமாரவேல் ஆகியோரும் அடங்குவர்.
குறிப்பாக, ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவெகவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான எதிர்ப்பு மனநிலை மாறவில்லை எனக் கூறப்படுகிறது. எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோரும் முரண்பட்டு காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனால், இந்த இடைத்தேர்தல் தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே கௌரவப் பிரச்சினையாகவும், முக்கிய சவாலாகவும் உருவெடுத்துள்ளது.தற்போது இடைத்தேர்தலுக்கான விருப்பமனுவை அதிமுக வெளியிட்டுள்ளது.
அதிமுகவுக்கு இருக்கும் சவால்
முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகிய இருவரும் அத்தொகுதிகளில் பல ஆண்டுகளாகச் செல்வாக்குமிக்க தலைவர்களாக இருந்தவர்கள். அவர்களுக்கு ஈடான செல்வாக்கு கொண்ட புதிய வேட்பாளர்களைக் கண்டறிந்து களம் இறக்குவது அதிமுக தலைமைக்கு சவாலான காரியமாக இருக்கும். சமீபத்தில் அதிமுகவில் கட்சி மாற முயன்றவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நீக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புதிய அமைப்புடன் களம் இறங்கி, தொண்டர்களை ஒருங்கிணைத்து வெற்றி பெறுவது அதிமுகவுக்கு கூடுதல் சவாலாக இருக்கும். சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக பெற்ற செல்வாக்கையும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் தவெகவின் பலத்தையும் எதிர்த்து போட்டியிடுவது அதிமுகவுக்கு எளிதான காரியமாக இருக்காது.
தவெக சந்திக்கும் சிக்கல்கள்
தவெக அரசுக்கு சட்டமன்றத்தில் போதிய தனிப்பெரும்பான்மை பெற மேலும் இடங்கள் தேவைப்படுவதால், இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருப்பதாக கூறப்படுகிறது. தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கே மீண்டும் சீட் வழங்கப்பட்டால், ‘பதவிக்காகக் கட்சி மாறினார்கள்’ என்ற மக்களின் அதிருப்தியையும், அதிமுக தொண்டர்களின் கோபத்தையும் சந்திக்க நேரிடும். ஆரம்பத்திலிருந்தே அத்தொகுதிகளில் தவெகவிற்காகப் பணியாற்றிய களப்பணியாளர்களை விட்டுவிட்டு, புதிதாக வந்த மாற்றுக்கட்சி தலைவர்களுக்கு வாய்ப்பளித்தால், அது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும். மற்ற கட்சிகளின் வியூகம் இந்த இருமுனைப் போட்டிக்கு இடையே நாம் தமிழர் கட்சியும் களமிறங்கும் நிலையில், திமுகவும் தனது வேட்பாளரை நிறுத்த வாய்ப்புள்ளது. தவெக அரசு மீதான குற்றச்சாட்டுகளையும், ஆட்சி மீதான விமர்சனங்களையும் முன்வைத்து, மக்களின் அதிருப்தியைத் தேர்தல் பிரசாரமாக மாற்ற திமுக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Source link
