கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 2024-இல் 67 பேரை பலிவாங்கிய மெத்தனால் கலந்த நச்சுச்சாராய சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் தாக்கல் செய்த இறுதி அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சட்டவிரோத சாராய விற்பனையைக் தடுக்கத் தவறிய காவல், வருவாய் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை உள்ளிட்ட 12 துறை அதிகாரிகளின் கடுமையான அலட்சியமே இந்தத் துயரத்திற்குக் காரணம் எனச் சாடப்பட்டுள்ளதோடு, தொடர்புடைய அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச் சாராயம் குடித்ததால் 67 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சோக நிகழ்வின் பின்னணியை விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது.
தனது விசாரணையை முழுமையாக நிறைவு செய்த நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம், அதன் இறுதி அறிக்கையை அண்மையில் அரசிடம் ஒப்படைத்தது. இந்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்களின்படி, இத்தகைய பெருந்துயரத்திற்கு அரசு இயந்திரத்தின் 12 முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் அலட்சியமும், பொறுப்பற்ற நடத்தையும் தான் முதன்மைக் காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, காவல்துறை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, வருவாய்த்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் தங்களது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியதாக ஆணையம் சாடியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனை தாராளமாக நடைபெறுவது குறித்து முன் கூட்டியே விவரங்கள் தெரிந்திருந்தும், அது தொடர்பாக எந்தவித முன்னெச்சரிக்கை அல்லது தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. கள்ளக்குறிச்சி, கச்சிராபாளையம், சங்கராபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவலர்கள், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோர் இந்த அசம்பாவிதத்திற்கு நேரடிப் பொறுப்பாவார்கள் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 2023 மே மாதம் நடந்த சாராயக் கொடுமையிலிருந்து பாடம் கற்காமல், 2024 ஜூன் வரை கள்ளக்குறிச்சியில் பணியாற்றிய தொடர்புடைய அனைத்து அரசு ஊழியர்கள் மீதும் உடனடியாகத் துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், சமூகப் பொருளாதார ரீதியிலான தீர்வாக, கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்குப் போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொருட்டு, அப்பகுதியில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் கோகுல்தாஸ் ஆணையம் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை கருதி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம். பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டால், படிப்படியாக அமல்படுத்த அரசு பரிசீலிக்கலாம் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், கள் இறக்க, விற்க உரிமம் தருவது, அதற்கு தகுந்த வரி விதிப்பது போன்றவற்றை அரசு பரிசீலிக்கலாம் என்றும் டாஸ்மாக்கில் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகளின் விலையை 50% குறைக்கலாம் என்றும் விலை குறைப்புக்காக மது வகைகளை டெட்ரா பேக்கில் அடைத்து விற்க பரிசீலிக்கலாம் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காலை 9 முதல் மதியம் 1, மாலை 5 முதல் இரவு 9 வரை என டாஸ்மாக் வணிக நேரத்தை மாற்றலாம் என்றும் ஒருநாளில் ஒருவருக்கான மதுபான விற்பனை அளவை கட்டுப்படுத்த விநியோக அட்டைகளை வழங்கலாம் என்றும் ஓய்வுப்பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
