கம்பம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் முதன் முறையாக தோட்ட தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள், பாதிரியார்களாக நியமிக்கப்பட்டனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே கண்ணன் தேவன் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் கருப்பசாமியின் மகள் விஜயா 48. இவர் வாகவரை சி.எஸ்.ஐ., சர்ச்சில் மணியக்காரராக பணியாற்றினார்.
மூணாறு லட்சுமி தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் அய்யப்பன் மகள் இந்திரா 49. இவர் மறையூர் சர்ச் நிர்வாகத்தின் கீழ் இரிஞ்சிகுடா என்ற ஊரில் செயல்படும் மகளிர் தொழிற் கல்வி நிலையத்தில் பணியாற்றினார்.
இவர்கள் இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள இறையியல் கல்லுாரியில், இறையியல் ஆய்வு இளங்கலை பட்டம் பெற்றனர்.
இந்நிலையில் கடந்த செப்.2ல் சி.எஸ்.ஐ., கொச்சி மறை மாவட்ட அதிபர் குரியன் பீட்டர், இரு பெண்களுக்கும் பாதிரியாராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். கேரள சி.எஸ்.ஐ., சர்ச்களில் ஏற்கெனவே ஸ்நேகலதா என்ற பெண் பாதிரியாராக உள்ளார்.
ஆனால் தோட்ட தொழிலாளர் குடும்பங்களை சேர்ந்த இரு பெண்கள் பாதிரியார்களாக நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை.
