ரூ.3 கோடி நகை கொள்ளை; ராஜஸ்தானில் மூவர் சிக்கினர்

விருத்தாசலம்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில், 3 கோடி ரூபாய் மதிப்பு தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், தலைமறைவான மேலும் மூவரை, ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வேப்பேரியை சேர்ந்த நகை வியாபாரி தீபக், 47, ஜூலை 23ம் தேதி, மதுரையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு சென்று, 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள் அடங்கிய மாதிரிகளை காண்பித்து, நகை ஆர்டர் பெற்றார்.

அங்கிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். ரயில், திருச்சியை கடந்து வந்தபோது, கைப்பை, நகைப்பையை வைத்துவிட்டு தீபக் கழிப்பறைக்கு சென்றார். திரும்பி வந்தபோது, பை மாயமானது.

விழுப்புரம், விருத்தாசலம் ரயில்வே போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். கடந்த மாதம், கொல்கட்டாவை சேர்ந்த அமர்நாத் ஜெய்ஸ், 60, பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த ராஜன்குமார், 30, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரித்ததில், நகைகளுடன் மேலும் மூவர் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

இரண்டு தனிப்படை போலீசார், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சென்று, பீஹார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த அசோக்குமார், 35, சுனில்குமார், 40, கொல்கட்டாவை சேர்ந்த அபிநவ் ஜெய்ஸ்வால், 57, ஆகியோரை கைது செய்து, தங்க, வைர நகைகளை பறிமுதல் செய்தனர்.

Source link